சென்னை : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதன்முறையாக ஐபிஎல் கோப்பை வென்றது மட்டுமின்றி மற்றொரு கேப்டன்சி சாதனையும் படைத்துள்ளார்.
2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார் ஸ்ரேயாஸ் ஐயர். அவரது தலைமையில் கொல்கத்தா அணி மூன்று போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்தது. லீக் சுற்றில் பத்து போட்டிகளில் வெற்றி பெற்ற அந்த அணி, அடுத்து பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப் போட்டியிலும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக மோதிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ், எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை எந்த ஐபிஎல் கேப்டனும் செய்யாத சாதனையை செய்தார். இரண்டு வெவ்வேறு அணிகளின் கேப்டனாக ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆடிய ஒரே வீரர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் செய்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆடி தோற்றது டெல்லி கேபிடல்ஸ்.அணி. 2022 முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். தற்போது 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்ததோடு, கேப்டனாக அந்த அணிக்கு கோப்பையும் வென்று கொடுத்துள்ளார். தனிப்பட்ட முறையில் தனது முதல் ஐபிஎல் கோப்பையையும் வென்றார்.
இதன் மூலம், இரு வேறு அணிகளை ஐபிஎல் இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.