சென்னை : தேர்வு குழு தலைவரின் காலை தொட்டு வணங்காததால் தனக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என கவுதம் கம்பீர் கூறியிருக்கிறார். 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை என இரண்டு உலகக்கோப்பைகளை வென்ற ஒரு வீரரின் வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருப்பது ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே கடினமான நபராக அறியப்படும் கவுதம் கம்பீரை அஸ்வின் தனது யூட்யூப் சேனலில் பேட்டி எடுத்தார். அந்த பேட்டியில் தான் அவர் இந்த தகவலை கூறி இருக்கிறார்.

இது குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், "நான் 12 அல்லது 13 வயதில் இருக்கும் போது பயிற்சி தலைவரின் காலை தொட்டு வணங்காத காரணத்தால் எனக்கு அண்டர் 14 கிரிக்கெட் தொடரில் விளையாட அனுமதி கிடைக்கவில்லை. அதுதான் எனது முதல் அண்டர் 14 தொடர். அப்போது எனக்கு நானே ஒரு சத்தியம் செய்து கொண்டேன். நான் இனி யாருடைய காலையும் தொட மாட்டேன், அதே போல எனது காலையும் யாரையும் தொட விடமாட்டேன் என்று முடிவு செய்தேன்" என்றார் கவுதம் கம்பீர்.
இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே மிகவும் கட்டுப்படுத்த முடியாத வீரராக கருதப்படுபவர் கவுதம் கம்பீர். ஆடுகளத்தில் எதிர் அணி வீரர்களுடன் சண்டையிடுவது, போட்டிகளின் போது மிக ஆக்ரோஷமாக நடந்து கொள்வது என அவர் கட்டுக்கடங்காத வீரராகவே வலம் வந்தார். அதை சிலர் ஆதரித்தாலும், அதன் காரணமாக அவருக்கு இந்திய அணியில் பலமுறை வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அவர் தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கிறார். அந்த அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலும் அவர் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவு தான்.