அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் மோதிய 17வது லீக் ஆட்டம் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு சென்றது என்று சொன்னால் மிகை ஆகாது. எப்படி யாருமே எதிர்பாராத மஞ்சு மேல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் வசூல் சாதனை படைத்ததோ, அதேபோல் குஜராத், பஞ்சாப் அணி மோதும் ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்காது என்று தான் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் யாருமே நினைத்துக் கூட பார்க்காத வகையில் இந்த தொடரின் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக இது அமைந்திருக்கிறது. காரணம் பஞ்சாப் அணியில் அடையாளம் காணக்கூடிய வீரர்கள் பெரிய அளவில் இல்லை. அந்த அணியில் இடம் பெற்றுள்ள சர்வதேச வீரர்களும் தொடர்ந்து சொதப்புவதால் பஞ்சாப் அணி மீது யாருமே நம்பிக்கை வைக்கவில்லை.

ஆனால் யார் என்றே தெரியாத இந்திய வீரர்கள் சஷாம் சிங் மற்றும் அசுத்தோஸ் சர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடி பஞ்சாப் அணிக்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நாம் இப்போது பார்க்க போகிறது பஞ்சாப் அணி வெற்றிக்காக போராடிய நிலையில் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் கடைசிவரை அந்த அணிக்கு நெருக்கடி கொடுத்து வந்தை பற்றி தான்.
சுப்மன் கில் கேப்டன்ஷிக்கு புதுசு என்றாலும் அவருடைய ஸ்டைல் அப்படியே ஆஸ்திரேலிய வீரர்களை பிரதிபலித்தது. எப்படி ஆஸ்திரேலிய வீரர்கள் போட்டியை வேண்டுமென்று தாமதப்படுத்தி நெருக்கடியை பேட்ஸ்மேன்களுக்கு ஏற்படுத்துவார்களோ, அதைப்போல் ஒரு பாணியை கில் செய்தார். நான் வெற்றியை உங்களுக்கு சுலபமாக கொடுக்க மாட்டேன். கடைசிவரையும் போராடுவேன் என்று கில் சொல்லாமல் செய்து காட்டி விட்டார்.
குறிப்பாக கடைசி ஓவரில் ஏழு ரன்கள் தான் தேவைப்பட்டது என்ற இக்கட்டான நிலை பந்து வீசும் அணிக்கு இருந்தது. இந்த நிலையில் குஜராத் அணி கடைசி ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டை எடுத்தது. இந்த ஓவரில் ஆறு பந்துகள் தான் இருந்தாலும் இதனை வீச குஜராத்த அணி நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது. ஒவ்வொரு பந்துக்கும் கில் பில்டர்களை மாற்றுவது, பவுலரிடம் போய் பேசுவது என நேரத்தை கடத்தினார்.
குறிப்பாக ஆட்டத்தின் 19.2 வது ஓவரின் குஜராத் வீரர் நால்காண்டி என்ற வீரர் தலைக்கு மேல் பந்தை வீசியதாக நடுவர் ஒயிட் கொடுத்தார். ஆனால் இது ஓயிடு கிடையாது என கில் டி ஆர் எஸ் முடிவை எடுத்தார். எனினும் மூன்றாம் நடுவர் பந்து தலைக்கு தான் சென்றது எனக் கூறி கில்லுக்கு சாதகமாக ஓயிடு தர மறுத்துவிட்டார்.இதேபோன்று இரண்டு பந்துகள் இருக்கும் போது ஒரு ரன் தேவை என இருந்தது.
அப்போது 19.5 வது ஓவரில் பஞ்சாப் அணிக்கு லெக் பைஸ் கிடைத்தது. கீப்பர் பந்தை பிடித்து எறிவதற்கு பஞ்சாப் வீரர்கள் ஒரு ரன் ஓடினர். பஞ்சாப் அணி வீரர்கள் இந்த வெற்றியை கொண்டாடிய நிலையில் திடீரென்று குஜராத் கேப்டன் கில் திடீரென்று இதற்கு ரிவியூ கேட்டார். அதாவது பந்து பேட்ஸ்மேனை கடக்கும் போது பேட்டில் பட்டதா என்று மூன்றாம் நடுவரின் உதவியை அவர் நாடினார். ஆனால் இது தெரியாமல் பஞ்சாப் அணி வீரர்கள் வெற்றியை கொண்டிருந்தனர். எனினும் இதன் ரிப்ளைவில் பந்து பேட்டில் படவில்லை என்பது தெளிவானது. இதன் மூலம் பஞ்சாப் அணியின் வெற்றி உறுதியானது .