அகமதாபாத் : 2024 ஐபிஎல் தொடரின் 45வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.
ஏற்கனவே, பிளே-ஆஃப் செல்ல மிக மிகக் குறைந்த வாய்ப்புடன் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த வெற்றி மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளே-ஆஃப் வாய்ப்புக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னதாக இந்தப் போட்டியில் குஜராத் அணி பேட்டிங் செய்த போது 45 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. சுப்மன் கில் 16 ரன்களும், சாஹா 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின் சாய் சுதர்ஷன் , ஷாரூக் கான் இணைந்து ரன் வேட்டையில் ஈடுபட்டனர். ஷாரூக் கான் 30 பந்துகளில் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சாய் சுதர்ஷன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். டேவிட் மில்லர் 19 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது.
அடுத்து சேஸிங் செய்த பெங்களூரு அணியின் துவக்க வீரர் டுபிலேசிஸ் 12 பந்துகளில் 24 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி - வில் ஜாக்ஸ் இணைந்து ஓவருக்கு 10 ரன்கள் என கணக்கிட்டு ரன் சேர்த்தனர். விராட் கோலி அரைசதம் அடித்த நிலையில் வில் ஜாக்ஸ் 15 மற்றும் 16வது ஓவரில் விஸ்வரூபம் எடுத்தார். அந்த இரண்டு ஓவர்களில் மட்டும் 58 ரன்கள் குவித்தார். ஜாக்ஸ் 41 பந்துகளில் சதம் அடித்த நிலையில் பெங்களூரு அணி வெற்றி இலக்கை எட்டியது. விராட் கோலி 44 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சு படுமோசமாக இருந்ததால் அந்த அணி தோல்வி அடைந்தது. அது மட்டுமின்றி, இந்த தோல்வியால் 10 போட்டிகளில் 4 வெற்றிகள் மட்டும் பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இன்னும் நான்கு போட்டிகள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் அந்த அணியால் பிளே-ஆஃப் செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.