மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளது. இதில் மற்றொரு அடியாக ஒட்டுமொத்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ தண்டனை வழங்கி உள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சின் போது குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்கவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக இந்த தவறு நடக்கிறது. முதல் முறை இந்த தவறை செய்த போது விதிப்படி கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் போட்டி சம்பளத்தில் 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

தற்போது இரண்டாவது முறையாக இந்த தவறு நடந்து இருப்பதால் ஐபிஎல் விதிப்படி கேப்டனுக்கு 24 லட்சம் அபராதமும், அணியில் இடம் பெற்று ஆடிய ஒவ்வொரு வீரருக்கும் போட்டி சம்பளத்தில் 25 சதவீதம் அல்லது 6 லட்சம், இதில் எது குறைவோ அது அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கிறது.
ஓவர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் வீசி முடிக்க வேண்டியது கேப்டனின் பொறுப்பாகும். ஃபீல்டிங் நிறுத்துவது, அம்பயரிடம் விளக்கம் கேட்பது, பந்துவீச்சாளருடன் ஆலோசிப்பது என ஒரு அணி நேரத்தை கடத்துவதை தவிர்க்கவே இந்த விதி அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு அணியின் கேப்டனே இது போன்ற நேர விரயத்தை தவிர்க்க முடியும். ஆனால், ஹர்திக் பாண்டியா அதை சரியாக கையாளவில்லை.
அதிலும் லக்னோ அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் மும்பை அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ அணி பேட்டிங்கின் போது நிதானமாகவே ஆடியது. கடைசி சில ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட்களை எடுத்ததால் வெற்றி பெற சிறிய வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்த வேண்டி அதிக நேரத்தை எடுத்துக் கொண்டார் ஹர்திக் பாண்டியா. அதன் காரணமாக ஓவர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் வீச முடியாமல் போனது.
2024 ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி மீதமுள்ள நான்கு போட்டிகளில் வென்றாலும் கூட பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.