IPL 2024: தோனியால் கூட சொல்லித் தர முடியாது.. வேதனையுடன் பேசிய ஹர்திக் பாண்டியா..தோல்விகளால் விரக்தி
மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார். இதற்கு முன் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இரண்டு ஆண்டுகள் செயல்பட்டவர் அந்த அணியை இரண்டு முறையும் இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றார். ஒரு முறை ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்தார்.
ஆனால் அவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மிக மோசமான தோல்விகளை சந்தித்த அந்த அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா அளித்த பேட்டியில் தனது மனநிலை குறித்து விரக்தியுடன் பேசி இருக்கிறார்.

குறிப்பாக தோல்விகளில் இருந்து தான் நிறைய கற்றுக் கொள்வதாகவும், இதையெல்லாம் தோனியால் கூட சொல்லித் தர முடியாது எனவும் அவர் கூறி இருக்கிறார். இது குறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், "நான் எப்போதுமே பொறுப்புகளை என் கையில் எடுத்துக் கொள்ள விரும்புவேன். ஏனெனில் நமது விஷயங்களை நாமே கையாண்டால் அது நமது மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். எனவே, என்னை பொறுத்தவரை எனது தவறுகளை நான் எப்போதுமே கையாள்வேன். சில சமயம் சில முடிவுகள் தவறாகச் சென்று தோல்வி அடையும் போது அதில் இருந்து கற்றுக் கொள்ளவும் முடியும்." என்றார்,
மேலும், "தோல்விகளில் இருந்து கிடைக்கும் இந்த அனுபவத்தை யாரும் நமக்கு சொல்லித் தர முடியாது. நமக்கு நெருக்கமானவரோ, நமது ஆதர்ச நாயகனோ, ஏன் தோனி நம்முடன் இருக்கும் போது அவரால் கூட ஓரளவுக்கு மேல் இதை கற்றுத் தர முடியாது." என்றார் ஹர்திக் பாண்டியா.
மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விகளை குறித்து பேசுகையில், "எங்களிடம் நிறைய கேள்விகள் உள்ளன. அதற்கு பதில் அளிக்க நிறைய கால அவகாசம் வேண்டும். இப்போதைக்கு அதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. எங்களால் பேட்டிங்கின் போது நீண்ட கூட்டணிகளை அமைக்க முடியவில்லை. தொடர்ந்து விக்கெட்களை இழந்தோம். பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்" என்று ஹர்திக் பாண்டியா கூறினார்.


Click it and Unblock the Notifications