இந்திய வீரருக்கு ஐபிஎல்-இல் ஆட தடை.. பிசிசிஐ அதிரடி.. 100 சதவீத சம்பளமும் அபராதம்.. என்ன நடந்தது?
கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் உள்ளூர் இந்திய வீரரான ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதித்து இருக்கிறது பிசிசிஐ. 2024 ஐபிஎல் தொடரில் விதிமுறைகளை மீறியதற்காக தடை விதிக்கப்படும் முதல் வீரர் ஹர்ஷித் ராணா என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஹர்ஷித் ராணா அந்த அணியின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய பின் அவருக்கு முத்தத்தை பறக்க விட்டு சைகை செய்தார். அது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. மேலும், ஐபிஎல் போட்டி விதிகளின் படி ஹர்ஷித் ராணா செய்த தவறான செயலுக்கு போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

அவர் மீண்டும் இதே போன்ற விதிமீறலில் ஈடுபட்டால் அவருக்கு ஒரு போட்டியில் ஆட தடையும் 100 சதவீத போட்டி சம்பளம் அபராதமாகவும் விதிக்கப்படும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் போரல் விக்கெட்டை வீழ்த்திய பின் வாயில் விரலை வைத்து பின் அவரை வெளியேறுமாறு சைகை செய்தார். பாதியிலேயே தான் செய்த தவறை உணர்ந்து அவர் கைகளை மடக்கினார்.
ஆனாலும், மேட்ச் ரெப்ரீ அதை விதிமீறலாக கணக்கில் எடுத்துக் கொண்டார். தன் மீதான அந்த குற்றச்சாட்டை ஹர்ஷித் ராணா ஏற்றுக் கொண்டதை அடுத்து அவருக்கு போட்டி சம்பளத்தில் 100 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும், ஒரு போட்டியில் ஆட தடையும் விதிக்கப்பட்டு இருக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக இருக்கும் ஹர்ஷித் ராணாவிற்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டு இருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும். நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்ஷித் ராணா 8 போட்டிகளில் 11 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications