சென்னை: எனது ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக தான் மீண்டும் பழைய ஹேர்ஸ்டைலுக்கு திரும்பியுள்ளதாக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, எப்போதும் இந்திய கிரிக்கெட்டின் முகமாகவே இருக்கிறார். ஐபிஎல் கோப்பைகள், விளம்பர ஒப்பந்தங்கள், தொழில்கள், கார்ஸ், பைக்ஸ், முன்னாள் வீரர்களுடனான சந்திப்பு என்று தோனியின் சொந்த வாழ்க்கையை பார்ப்பதும் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஐபிஎல் தொடரில் காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்த பின், நீண்ட நாட்களாக தோனி ஓய்வில் இருந்தார். அதன்பின் சிறுசிறு உடற்பயிற்சிகளை மேற்கொண்ட தோனி, முழுமையாக நடக்க தொடங்கிய பின் விடுமுறைக்காக வெளிநாடு சென்று திரும்பினார். அப்போது முதல் தோனி இந்தியா முழுக்க பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பேசி வருகிறார்.
அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தோனியின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றன. குறிப்பாக தோனியின் ஹேர்ஸ்டைலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டை ஆட தொடங்கிய போது நீண்ட தலைமுடியை தொங்கவிட்டு அதன்மேல் கேப் அணிந்த விளையாடிய போது, அந்த ஹேர்ஸ்டைலை பலரும் ரசித்தனர்.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேலாக அதே ஹேஸ்டைலுடன் இருந்த தோனி, சாக்ஷியை காதலித்த போது வெட்டினார். அதன்பின் வித்தியாசமான ஹேர்ஸ்டைலை வைத்தாலும், அந்த விண்டேஜ் ஹேர்ஸ்டைலுக்கு மட்டும் தோனி திரும்பவில்லை. இந்த நிலையில் மீண்டும் தலைமுடியை வளர்ப்பது குறித்து தோனி பேசியுள்ளார்.
அதில், ஒரு ஹேர்ஸ்டைலை பராமரிப்பது எளிதான விஷயமல்ல. சில மாதங்களுக்கு முன்பெல்லாம் நான் எங்கு செல்ல வேண்டுமென்றாலும் வெறும் 20 நிமிடங்களில் தயாராக இருப்பேன். ஆனால் இப்போது நான் தயாராவதற்கு ஒரு மணி நேரம் மற்றும் 10 நிமிடங்கள் வரை ஆகிறது. அதற்கு இந்த ஹேர்ஸ்டைல் தான் காரணம். ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக தான் இந்த ஹேர்ஸ்டைலை வைத்துள்ளேன். எப்போது எனக்கு போதும் என்று தோன்றுகிறதோ, அப்போது நிச்சயம் வெட்டிவிடுவேன் என்று கூறியுள்ளார்.