IPL 2024 : குடும்பக் கடனை அடைத்தேன்.. அம்மாவுக்கு நகை வாங்கி கொடுத்தேன்.. நெகிழும் துருவ் ஜுரெல்!
மும்பை : 2022ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் அடிப்படை விலைக்கு வாங்கப்பட்ட பின், இந்திய அணி வீரர் துருவ் ஜுரெல் என்ன செய்தார் என்பது குறித்து கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் துருவ் ஜுரெல். ராஞ்சி டெஸ்ட் போட்டியில் ஒற்றை ஆளாக நின்று துருவ் ஜுரெல் ஆடிய ஆட்டம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் என்ற நிலையில், துருவ் ஜுரெல் 90 ரன்களை விளாசி அசத்தினார்.

அதேபோல் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆட்டமிழக்காமல் 39 ரன்களை விளாசினார். இதன் மூலம் ஆட்டநாயகன் விருதினை வென்றதோடு, இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பராகவும் மாறினார். இவரது ஆட்டத்தை பார்த்து வியந்த சுனில் கவாஸ்கர், அடுத்த எம்எஸ் தோனி உருவாகி வருவதாக பாராட்டு தெரிவித்தார். இவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த ஆண்டு இன்பேக்ட் பிளேயராக களமிறங்கி பலரின் கவனத்தை ஈர்த்த துருவ் ஜுரெல், 13 போட்டிகளில் விளையாடி 152 ரன்களை விளாசினார். ராஜஸ்தான் அணியின் சிறந்த ஃபினிஷராகவும் பார்க்கப்பட்டார். எளிய பின்னணியில் இருந்து வரும் துருவ் ஜுரெலின் கிரிக்கெட் கனவிற்கு குடும்பத்தினர் அதிகளவு கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தரமான கிரிக்கெட் கிட்டினை வாங்குவதற்காக துருவ் ஜுரெலின் அம்மா நகையை அடமானம் வைத்துள்ளனர். இதுகுறித்து துருவ் ஜுரெல் பேசுகையில், எனது கிரிக்கெட் லட்சியத்திற்காக குடும்பத்தினர் பட்ட கஷ்டங்கள் ஏராளம். எனக்காகவே அதிகமாக கடன் வாங்கி இருந்தார்கள். அந்த சூழலில் தான் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.20 லட்சம் அடிப்படை விலைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டேன்.
அந்த பணம் கையில் கிடைத்தவுடன் குடும்பத்தின் மொத்த கடனையும் அடைத்துவிட்டேன். அதேபோல் எனக்காக நகைகளை அடமானம் வைத்த அம்மாவுக்கு புதிதாக நகைகளை வாங்கி கொடுத்தேன். முதல் ஐபிஎல் தொடரில் கிடைத்த பணம் தான் எனது முதல் சம்பளம். முதல் சம்பளத்திலேயே குடும்பக் கடனை அடைத்தது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications