மும்பை : ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் சிறப்பாக பேட்டிங் செய்து விக்கெட் கீப்பிங் மேற்கொள்ளும் பட்சத்தில், டி20 உலகக்கோப்பை தொடருக்கும் தேர்வு செய்யப்படுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், 15 மாதங்களுக்கும் மேலாக ஓய்வில் இருக்கிறார். மருத்துவமனை சிகிச்சை முடிவடைந்த நிலையில், மீண்டும் பழைய ஃபிட்னஸை எட்டுவதற்காக ரிஷப் பண்ட் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் என்சிஏ தரப்பில் ரிஷப் பண்ட் சான்றிதழ் பெற்றது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளிவரவில்லை. இருப்பினும் டெல்லி அணியின் உரிமையாளர்கள் தரப்பில், ரிஷப் பண்ட் முதல் 7 போட்டிகளில் பேட்ஸ்மேனாக களமிறக்க திட்டமிட்டுள்ளோம். அதன்பின் அவரின் உடல்நிலையை பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் ரிஷப் பண்ட் உடல்நிலை குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல் வெளியிட்டுள்ளார். அதில், ரிஷப் பண்ட் நன்றாக பேட்டிங் செய்கிறார், நன்றாக விக்கெட் கீப்பிங் செய்கிறார். விரைவில் அவர் முழு ஃபிட்னஸையும் எட்டிவிட்டார் என்று சான்றிதழ் அளிக்கப்படும். இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் டி20 உலகக்கோப்பையில் விளையாடினால், அது மிகப்பெரிய விஷயமாக இருக்கும்.
ஏனென்றால் இந்திய அணியின் அசாத்திய வீரர்களில் அவரும் ஒருவர். ஒருவேளை ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்ய முடிந்தால், நிச்சயம் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவார். இதனால் ஐபிஎல் தொடரில் அவரின் ஆட்டத்தை கவனிப்போம் என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான விக்கெட் கீப்பர்கள் ரேஸில் ஜித்தேஷ் சர்மா, சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகிய மூவரும் உள்ளனர். இவர்களில் 2 பேர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால், ரிஷப் பண்ட் திடீரென அணிக்குள் எப்படி கொண்டு வரப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ரசிகர்களிடையே டி20 உலகக்கோப்பை அணி பற்றிய விவாதமும் தொடங்கியுள்ளது.