கேகேஆர் அணியின் ஆலோசகராக கம்பீர் இடத்தில் வரும் தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்? ஷாருக் கான் திட்டம்!
கொல்கத்தா: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இந்த பொறுப்பை கவுதம் கம்பீர் ஏற்கவுள்ளார். இதனால் கவுதம் கம்பீர் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏனென்றால் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியின் கேப்டனாக 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் கவுதம் கம்பீர். அதன்பின் மீண்டும் கடந்த ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியின் ஆலோசகராக வந்த கவுதம் கம்பீர், 3வது கோப்பையையும் வென்று கொடுத்தார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை கவுதம் கம்பீர் ஏற்றுள்ளார். இதன் காரணமாக கேகேஆர் அணியின் ஆலோசகராக பதவி காலியாக உள்ளது. இதனால் அந்த பதவிக்கு கேகேஆர் அணி நிர்வாகம் யாரை கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், கேகேஆர் அணியின் முன்னாள் வீரர் காலீஸ், அந்த அணியின் ஆலோசகராக வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் கேகேஆர் அணி சாம்பியன் பட்டம் வென்ற போது வீரராக விளையாடியவர் காலீஸ். இதன்பின் ஓய்வு பெற்ற அவரை, 2015ஆம் ஆண்டே கேகேஆர் அணி நிர்வாகம் ஆலோசகராக கொண்டு வந்தது. 2019ஆம் ஆண்டு வரை காலீஸ் பணியாற்றிய நிலையில், தென்னாப்பிரிக்கா அணியின் பேட்டிங் ஆலோசகராக பொறுப்பேற்றார்.
இதன்பின் கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மெக்கலத்திற்கு பின் சந்திரகாண்ட் பண்டிட் பொறுப்பேற்றார். அவர் இந்திய வீரர்களை சிறப்பாக கையாண்டாலும், வெளிநாட்டு வீரர்களை கையாண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கேகேஆர் அணி மீண்டும் கவுதம் கம்பீரை ஆலோசகராக கொண்டு வந்தது.
காலீஸ் ஆலோசகர் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டால், கேகேஆர் அணியின் ஸ்டைலில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களை எளிதாக கையாள முடியும். அதேபோல் ஜாம்பவான் வீரரான காலீஸ்-ன் நிதான அணுகுமுறை கேகேஆர் அணிக்கு உதவியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications