சென்னை : 2024 ஐபிஎல் ஏலத்தின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்-ஐ 20.50 கோடி கொடுத்து வாங்கினார். அப்போது அம்பானி, கோயங்கா உள்ளிட்ட பிற அணிகளின் உரிமையாளர்கள் அவரை ஏளனம் செய்தனர். அது குறித்த வீடியோக்களம் அப்போது சமூக வலைதளங்களில் பரவியது.
ஆனால், இன்று அவரை ஏளனம் செய்த அணிகள் எல்லாம் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. ஆனால் பாட் கம்மின்ஸ் தலைமையில் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2024 ஐபிஎல் இறுதிப்போட்டி வரை முன்னேறி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே பெற்று வந்தது. இந்த நிலையில் 2024 ஐபிஎல் ஏலத்தில் அந்த அணி ஒரு அதிரடி முடிவை எடுத்தது.

அதன்படி சிறந்த கேப்டன் வேண்டும் என முடிவு செய்து 2023 ஒருநாள் போட்டி உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்-ஐ வாங்க முடிவு செய்தது. ஆனால் இதில் ஒரு சிக்கலும் இருந்தது. பாட் கம்மின்ஸ் சராசரியான டி20 வேகப் பந்துவீச்சாளர் ஆவார். அந்த காரணத்தினாலேயே அவரை எந்த அணியும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் 2024 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தின் போது வேகப் பந்துவீச்சாளர் வேண்டும் என்ற நிலையில் இருந்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் சுமார் 7.60 கோடி வரை ஏலத்தில் விலை கேட்டன. அதற்கு மேல் பாட் கம்மின்ஸ்-க்கு விலை கொடுத்து வாங்குவது வீண் என நினைத்த அந்த அணி, அதன் பின் ஏலம் கேட்கவில்லை.
பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் முட்டி மோதின. காவ்யா மாறன் இடைவிடாமல் விலை கேட்டு கம்மின்ஸ்-ஐ வாங்குவதில் குறியாக இருந்தார். அதன் முடிவில் 20.50 கோடி ரூபாய் கொடுத்து கம்மின்ஸ்-ஐ வாங்கினார் காவ்யா மாறன். அப்போது அவர் துள்ளிக் குதித்தார். ஆனால், அருகில் இருந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-இன் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, காவ்யா மாறன் எடுத்த முடிவைக் கண்டு சிரித்தார்.
மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்களான அம்பானி குடும்பத்தினர் பாட் கம்மின்ஸ்-க்காக ஆர்சிபி-யுடன் காவ்யா மாறன் போட்டி போட்டு ஏலத்தில் 20.50 கோடி வரை விலை கேட்டதை பார்த்து சிரித்தார்கள். அப்போது பாட் கம்மின்ஸ் ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரராக இருந்தார். அடுத்த சில மணி நேரங்களில் மிட்செல் ஸ்டார்க் அந்த சாதனையை முறியடித்தாலும் கூட காவ்யா மாறன் கொடுத்த விலை அதிகம் என கடும் விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், அவரை வெறும் வேகப் பந்துவீச்சாளராக மட்டும் பார்க்காத சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், அவரை ஒரு உலகக் கோப்பை வென்ற கேப்டனாக பார்த்தார். உலகின் சிறந்த அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவை வழி நடத்தும் அனுபவம் கொண்ட ஒரு கேப்டனாக பார்த்தார். அதன் காரணமாகவே அவரை சன்ரைசர்ஸ் அணிக்கு அழைத்து வந்தார். தற்போது பாட் கம்மின்ஸ் அந்த அணியை 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சன்ரைசர்ஸ் அணி தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மிகப்பெரும் சாதனையாகும். அந்த வகையில் காவ்யா மாறன் தான் எடுத்த முடிவு மிகச் சரியானது என நிரூபித்து இருக்கிறார்.