சென்னை : ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புதிய சாதனை ஒன்றை செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இரண்டுக்கும் மேற்பட்ட முறை கோப்பை வென்ற அணிகள் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தான்.
இந்த நிலையில் ஒரே அணி இரண்டு வெவ்வேறு கேப்டன்கள் தலைமையில் ஐபிஎல் கோப்பை வென்றது இல்லை என்ற நிலை இருந்தது. அதை 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முறியடித்துள்ளது. அந்த அணி 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் கவுதம் கம்பீர் தலைமையில் இரண்டு முறை ஐபிஎல் கோப்பை வென்று இருந்தது. அதன் பின் 2024 இல் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது.

இதன் மூலம் இரண்டு வெவ்வேறு கேப்டன்கள் தலைமையில் இரண்டு ஐபிஎல் கோப்பைகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று இருந்தாலும் அவை அனைத்துமே தோனியின் கேப்டன்சியில் வென்றவை தான். அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மா தலைமையில் தான் ஐந்து ஐபிஎல் கோப்பைகளையும் வென்று இருக்கிறது.
இந்த ஆண்டு முதல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும், அந்த இரண்டு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புதிய கேப்டன் தலைமையில் ஐபிஎல் கோப்பையை வென்று காட்டியுள்ளது.
அதற்கு முக்கிய காரணம் கவுதம் கம்பீர் தான். அவரின் தலைமையில் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு ஐபிஎல் கோப்பைகளை வென்றிருந்தது. இந்த நிலையில் சுமார் 6 ஆண்டுகள் கழித்து அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக திரும்பினார். இதை அடுத்து கடந்த ஆண்டுகளில் சொதப்பி வந்த அந்த அணி, இந்த ஆண்டு அபாரமாக செயல்பட்டு ஐபிஎல் கோப்பை வென்றது.
இதே போலவே வரும் காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை ஆலோசகராக நியமிக்க வேண்டும் எனவும், மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை கைவிடாமல் அவரது ஆலோசனையின் கீழ் செயல்பட வேண்டும் எனவும், அப்போதுதான் அந்த அணிகளும் புதிய கேப்டன்கள் தலைமையில் ஐபிஎல் கோப்பை வெல்லும் என விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.