மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தி இருக்கிறது. இதன் மூலம் ஐபிஎல் தொடர் எப்படி முடிவடையப் போகிறது என்ற தெளிவு ரசிகர்கள் மத்தியில் புலப்பட்டு விட்டது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்ற முயற்சியில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து தடுமாறி வந்தனர்.

பிரித்வி ஷா மூன்று பவுண்டரிகளை சேர்த்த நிலையில் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதேபோன்று கடந்த போட்டியில் அதிரடியாக செயல்பட்ட ஜேக் பிரேசர் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என ஏழு பந்துகளில் 12 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய் ஹோப் 6 ரன்களிலும், அபிஷேக் போரெல் 18 ரன்களிலும் பெவிலியன் திரும்ப கேப்டன் ரிஷப் பண்ட் நிதானமாக விளையாடி 20 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்த நிலையில் வரும் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
இதேபோன்று அக்சர் பட்டேல் 15 ரன்களிலும் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் 4 ரன்களிலும் பெவிலியன் திரும்பினார். இதனால் டெல்லி அணி 99 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் இறுதியில் குல்தீப் யாதவ் அபாரமாக விளையாடி 26 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் என்ற கௌரவ இலக்கை எட்டியது.
கொல்கத்தா பந்துவீச்சு தரப்பில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதை அடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணியில் தொடக்க வீரர்கள் சால்ட் அதிரடியை கிளப்பினார். 33 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 68 ரன்களை சேர்த்தார்.
இதில் ஏழு பவுண்டரிகள், 5 சிக்சர்கள் அடங்கும் சுனில் நரைன் 15 ரன்களிலும் ரிங்கு சிங் 11 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இந்த நிலையில் வெங்கடேஸ் ஐயர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினர். ஸ்ரேயாஸ் 33 ரன்களும், வெங்கடேஷ் 26 ரன்களும் எடுத்தனர்.இதனால் கொல்கத்தா அணி 16.3 ஓவரில் எல்லாம் 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் கொல்கத்தா அணி 12 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஐபிஎல் தொடரில் மும்பை,ஆர்சிபி,பஞ்சாப், குஜராத் போன்ற அணிகள் எல்லாம் புள்ளி பட்டியலில் கீழே இருக்கிறது. இவர்கள் குறைந்தபட்ச போட்டிகளில் வென்று விளையாட்டுக்குச் செல்ல வேண்டும் என்றால் டாப் இரண்டு இடங்களில் பிடித்திருக்கும் அணி அதிக போட்டிகளில் வெல்ல வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே கீழே இருக்கும் அணிகளுக்கு உதவி கிட்டும். இதனால் இந்த ஸ்கிரிப்டு படியே ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.