கொல்கத்தா : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றதற்கு அந்த அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான சுனில் நரைன் முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்துள்ளது. கடைசி ஓவரில் ஹர்சித் ராணா சிறப்பாக பவுலிங் செய்து அசத்தினார். ஷாபாஸ் அஹ்மத் மற்றும் கிளாசன் இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தியதோடு, கடைசி பந்தை டாட் பாலாக வீசி அசத்தினார். ஹர்சித் ராணாவின் திறமையை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆனால் கேகேஆர் அணியின் வெற்றிக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் சுனில் நரைன் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி பவுலர்களால் மொத்தமாக 14 சிக்ஸ், 13 ஃபோர்ஸ் என்று மொத்தமாக 27 பவுண்டரிகள் விட்டுக் கொடுக்கப்பட்டது. ஐதராபாத் அணி பவுலர்களின் எகனாமியில் ஒருவருக்கு கூட 8 ரன்களுக்கு கீழ் இல்லை.
அதேபோல் கொல்கத்தா அணி பவுலர்கள் 12 ஃபோர்ஸ், 15 சிக்ஸ் என்று மொத்தமாக 27 பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தனர். அந்த அணியில் ஒரு பவுலரை தவிர்த்து மற்ற அனைவரின் எகனாமியும் 8 ரன்களுக்கு மேலாகவே இருந்தது. கேகேஆர் அணியின் நட்சத்திர வீரரான சுனில் நரைன் 4 ஓவர்கள் வீசி 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
அவரின் எகனாமி ரேட் வெறும் 4.80ஆக மட்டுமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் சுனில் நரைன் பவுலிங்கில் ஒரு பவுண்டரியை கூட ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் அடிக்கவில்லை. இதன் மூலமாக சுனில் நரைனின் பவுலிங்கே கேகேஆர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது புரிய வருகிறது. அதிலும் கிளாசன் பேட்டிங் செய்த போது, அவருக்கு ஸ்லிப் ஃபீல்டிங் வைத்து பவுலிங் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
2012ஆம் ஆண்டு முதல் கேகேஆர் அணிக்காக விளையாடி வரும் சுனில் நரைன், இதுவரை 163 போட்டிகளில் விளையாடி 164 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரை கேகேஆர் அணியில் வாங்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தவர் கவுதம் கம்பீர். தற்போது கேகேஆர் அணியின் ஆலோசகராக கம்பீர் இருப்பதால், நரைனின் ஆட்டம் இன்னும் தீவிரமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.