சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 22 ஆவது லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணியை எதிர் கொண்ட சிஎஸ்கே அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த சிஎஸ்கே அணி கே கே ஆர் அணியை 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களில் சுருட்டியது.
இதனை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 17.4 ஓவர்களில் எல்லாம் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இந்த நிலையில் நடப்பு தொடரில் கே கே ஆர் அணி முதல் தோல்வியை தழுவி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இன்று நடந்ததை பற்றி என்னால் தற்போது விவரிக்கவே முடியவில்லை.

அப்படித்தான் நான் உணர்கிறேன். முதலில் ஆடுகளத்தை பார்த்து நாங்கள் ஏமாந்து விட்டோம். ஆடுகளம் எப்படி செயல்பட போகிறது என்பதை நாங்கள் கணிக்க தவறிவிட்டோம். பவர் பிளேவில் நாங்கள் அபார தொடக்கத்தை கொடுத்தோம். ஆனால் அந்த அடித்தளத்தை எங்களால் சரியாக பயன்படுத்திக் கொண்டு பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை.
கள சூழலை நாங்கள் கணிக்க தவறியது இதற்கு காரணம் என நினைக்கின்றேன். பவர் பிளே முடிந்தவுடன் ஆடுகத்தின் தன்மை முற்றிலும் தலைகீழாக மாறியது. ரன்களை சேர்ப்பது இந்த ஆடுகளத்தில் மிகவும் கடினமாக இருந்தது. சிஎஸ்கே அணி இந்த சூழலில் எப்படி விளையாட வேண்டும் என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் சரியான திட்டத்தை தீட்டி அதற்கு தகுந்தார் போல் செயல்பட்டார்கள்.
முதல் பந்தில் இருந்தே இங்கு அதிரடியாக ஆடுவது என்பது முடியாத விஷயம். நாங்கள் நல்ல நிலையில் தான் பேட்டிங் செய்யும்போது இருந்தோம். இந்த ஆடுகளத்தில் 160 அல்லது 170 ரன்கள் எடுத்திருந்தால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். அதுதான் எங்களுடைய திட்டமாக இருந்தது.ஆனால் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் சரியாக விளையாட முடியவில்லை.
இந்த தோல்வி குறித்து அணி வீரர்கள் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும். நல்ல வேலை இந்த தோல்வி சீசனின் தொடக்கத்திலே அமைந்துவிட்டது. மீண்டும் எங்களுடைய சொந்த மைதானத்திற்கு சென்று அங்கு உள்ள கலர் சூழலை சிறப்பாக பயன்படுத்தி வெற்றி பெற முயற்சி செய்வோம். கள சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் விளையாடுவதில் தான் வெற்றி அமைந்திருக்கிறது என ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.