கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ரிங்கு சிங் 2024 ஐபிஎல் தொடருக்கு முன்பு வரை இந்திய டி20 அணியில் தவிர்க்க முடியாத வீரராக பார்க்கப்பட்டார். ஆனால், ஐபிஎல் தொடரில் அவர் மிக மோசமாக ஆடி வந்ததை அடுத்து அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது என தகவல்கள் வெளியாகின.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் 123ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் ரிங்கு சிங். அவரது ஸ்ட்ரைக் ரேட் 150 ஆக இருந்தாலும் பேட்டிங் சராசரி 20 மட்டுமே. இந்த காரணத்தால் ரிங்கு சிங் பதற்றத்தில் இருந்தார். இந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு அதிக நேரம் பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுத்தார் கொல்கத்தா அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர். ஆனால், அதிலும் சொதப்பி இருக்கிறார் ரிங்கு சிங்.

இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது எளிதாக எட்டக் கூடிய இலக்கு என்ற நிலையில் ரிங்கு சிங் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்பட்டார். கொல்கத்தா அணியின் துவக்க வீரர் சுனில் நரைன் 15 ரன்கள் மட்டுமே எடுத்து 7வது ஓவரில் ஆட்டமிழந்த போது ரிங்கு சிங் மூன்றாம் வரிசையில் களமிறங்கினார்.
இதன் மூலம் ரிங்கு சிங் தன் பேட்டிங் ஃபார்மை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ரிங்கு சிங் 11 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவரது பேட்டிங் செயல்பாடு பெரும் ஏமாற்றம் அளித்தது. ரிங்கு சிங் ஆட்டமிழந்தாலும் பில் சால்ட் 68 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 33 ரன்கள் மற்றும் வெங்கடேஷ் ஐயர் 26 ரன்கள் குவித்து கொல்கத்தா அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இதை அடுத்து ரிங்கு சிங் இந்திய டி20 அணியில் இடம் பெறுவது சந்தேகம் தான். தற்போது இந்திய அணியின் மிடில் ஆர்டரில் அதிரடியாக பேட்டிங் செய்ய ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே என பேட்ஸ்மேன்கள் வரிசை கட்டி நிற்கும் நிலையில் ரிங்கு சிங் அணியில் தேர்வாவது கடினமாக மாறி உள்ளது.