சென்னை : 2024 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிக மோசமாக பேட்டிங் செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியில் முதல் ஓவரிலேயே பேட்டிங்கில் சொதப்பி, பின்னர் மிகப்பெரும் விக்கெட் சரிவை சந்தித்தது. அதை கண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் உறைந்து போனார். போட்டி முடியும் வரை அவர் அதே நிலையில் தான் இருந்தார்.
2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டி நடந்த பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா முதல் ஓவரின் முதல் பந்தை சந்தித்தார்.

கொல்கத்தா அணியின் மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரை வீசினார். தான் ஆடும் முதல் ஐபிஎல் இறுதிப் போட்டி என்பதால் அபிஷேக் சர்மா நடுக்கத்துடன் காணப்பட்டார். மறுபுறம் உலகின் அனுபவம் வாய்ந்த வேகப் பந்துவீச்சாளரான ஸ்டார்க் பந்து வீசியதால் அபிஷேக் தடுமாறினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் அவர் விக்கெட்டை பறி கொடுத்தார்.
அப்போது காவ்யா மாறன் அதைக் கண்டு உறைந்து போனார். அதன் பின் அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் முடியும் வரை அதே நிலையில் தான் இருந்தார். அந்த அளவுக்கு தொடர்ந்து விக்கெட்களை இழந்து, மிக மோசமாக பேட்டிங் செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
அபிஷேக் ஷர்மாவை தொடர்ந்து மற்றொரு அதிரடி துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். எய்டன் மார்கிரம் 20 ரன்களும், பாட் கம்மின்ஸ் 24 ரன்களும் எடுத்ததே அந்த அணி வீரர்கள் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். மற்ற வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 18.3 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது.
அடுத்து சேஸிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் 10.3 ஓவர்களில் சேஸிங் செய்து முடித்து 2024 ஐபிஎல் கோப்பையை வென்றது.