வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயரை பொளந்த தமிழக வீரர்.. ஒரே ஓவரில் 2 பேரும் காலி.. சாதித்த நடராஜன்!
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி தமிழக வீரர் நடராஜன் சாதனை படைத்துள்ளார்.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 3வது லீக் போட்டியில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். புதிய ஜெர்சி, புதிய கேப்டனுடன் ஐதராபாத் அணி களமிறங்கியதால், அந்த அணியின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த நிலையில் கேகேஆர் அணி தரப்பில் சுனில் நரைன் - பில் சால்ட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. 2வது ஓவரை வீசிய மார்கோ யான்சன் பவுலிங்கில் தொடக்க வீரர் பில் சால்ட் ஹாட்ரிக் சிக்ஸ் விளாசி ஆச்சரியம் கொடுத்தார். ஆனால் அந்த ஓவரின் கடைசி பந்தில் சுனில் நரைன் 2 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலம் ஐதராபாத் அணி ஆட்டத்திற்குள் வந்தது.
பின்னர் 4வது ஓவரில் நடராஜனை அட்டாக்கில் கொண்டு வந்தார் பேட் கம்மின்ஸ். அந்த ஓவரின் 2வது பந்திலேயே வெங்கடேஷ் ஐயர் பவுண்டரி விளாச, 3வது பந்திலும் பவுண்டரி அடிக்க முயற்சித்து யான்சன் கைகளில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். இதனால் ஆட்டம் பரபரப்பாகியது. ஆனால் நடராஜன் வீசிய 4வது பந்தில் பேட் கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகினார்.
இதன் மூலமாக தமிழக வீரர் நடராஜன் ஐபிஎல் தொடரில் தனது 50வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இதுவரை 47 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2020ஆம் ஆண்டு ஐதராபாத் அணிக்காக விளையாடிய போது, இவரின் யார்க்கர் திறமையை கண்டறியப்பட்ட நிலையில், அந்த அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக மாறினார்.
அதன்பின் ஐதராபாத் அணியுடன் நடராஜன் தொடர்ந்து பயணித்து வருகிறார். கடந்த சில சீசன்களில் காயம் காரணமாக சில பிரச்சனைகளை சந்தித்து வந்த நடராஜன், இந்த சீசனில் முழுமையாக குணமடைந்து பங்கேற்றுள்ளார். முதல் ஓவரிலேயே நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளது தமிழக ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications