கொல்கத்தா : சிஎஸ்கே, மும்பை போல் அல்லாமல் கொல்கத்தா அணி கடந்த சில ஆண்டுகளாக நட்சத்திர அந்தஸ்தை இழந்துவிட்டதாக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் கவுதம் கம்பீர் தலைமையிலான கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இதன் மூலம் சிஎஸ்கே, மும்பை அணிகளுக்கு நிகராக கேகேஆர் அணி நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வந்தது. அதன்பின் கவுதம் கம்பீர் ஓய்வை அறிவித்து, கிரிக்கெட்டில் இருந்து சில காலங்களில் விலகினார்.

பின்னர் லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர், தற்போது மீண்டும் கேகேஆர் ஜெர்சியை அணியவுள்ளார். இம்முறை கேப்டனாக அல்லாமல் ஆலோசகராக கேகேஆர் அணிக்காக களமிறங்குகிறார். இதற்காக அரசியலில் இருந்து மொத்தமாக விலகி பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளார். இதனால் கேகேஆர் அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், முதல் நாளிலேயே நான் கூறியதை போல், எனக்கு ஐபிஎல் தொடர் சாதாரண விளையாட்டு கிடையாது. பாலிவுட் சினிமாவை போலவோ, பார்ட்டி செய்யும் இடமோ கிடையாது. ஐபிஎல் தொடர் என்பது களத்தில் நிரூபிப்பிதற்கானது. அதனால் தான் உலகின் நம்பர் 1 லீக் தொடராக உள்ளது. சர்வதேச போட்டிகளுக்கு கொஞ்சம் கூட குறையாத தரத்துடன் ஐபிஎல் தொடர் உள்ளது.
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக திகழ வேண்டுமென்றால், களத்தில் நிரூபிப்பது மட்டுமே ஒரே வழியாகும். ஏனென்றால் கிரிக்கெட்டை உண்மையாக நேசிக்கும் ரசிகர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு அனைவரும் உண்மையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு வெற்றியின் மூலமாக மகிழ்ச்சியை அளிக்க வேண்டும். கேகேஆர் அணிக்கு எப்போதும் உண்மையான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால் முதல் 3 ஆண்டுகளில் கேகேஆர் அணியின் தோல்வியால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் தான்.
ஒரு காலத்தில் கேகேஆர் அணி நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வந்தது. அதற்கு காரணமாக கேகேஆர் அணிக்கு பின் இருந்த முகங்கள் அல்ல என்பதை நம்புபவன் நான். ஏனென்றால் கிரிக்கெட் களத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்தே ஒவ்வொரு அணிக்கும் மரியாதை கிடைக்கும். கேகேஆர் அணி களத்தில் செயல்படுவதை வைத்தே அறியப்படும். அப்படிதான் அறியப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.