சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 211 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த நிலையிலும் லக்னோக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருக்கிறதும் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு படுமோசமாக இருந்த நிலையில் லக்னோ அணி வீரர் மார்க்கஸ் ஸ்டோனிஸ் 63 பந்துகளில் 124 ரன்கள் குவித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் இந்த தோல்வியை ஜீரணித்துக்கொள்ள மிகவும் கடுமையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ஆட்டத்தில் இறுதியில் லக்னோ வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 13 வது ஓவர் வரை வெற்றி எங்கள் கையில் தான் இருந்தது. ஆனால் ஸ்டோனிஸ் பிரமாதமாக விளையாடிவிட்டார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பனிப்பொழிவு இந்த ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்தப் போட்டியை நாங்கள் இறுதிவரை கொண்டு செல்ல முடிந்திருக்கும். ஆனால் ஆட்டத்தில் இது எல்லாம் ஒரு பகுதி தான். பனிப்பொழிவு போன்ற இயற்கை எல்லாம் நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
நாங்கள் இரண்டாவது விக்கெட்டை விரைவில் இழந்ததால் தான் ஜடேஜாவை முன் வரிசையில் களமிறங்கினோம். நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தெளிவாக இருந்தோம். யார் ஆட்டமிழந்தாலும் ஜடேஜா முன்னதாக களம் இறங்க போவது தான் எங்களுடைய திட்டமாக இருந்தது.ஆனால் பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம்.
நாங்கள் எடுத்த இலக்கை விட அதிகமாக நிச்சயம் சேர்த்து இருக்க முடியாது. எனினும் நாங்கள் எடுத்த ஸ்கோர் போதுமானதாக இருந்தது என்று நான் நினைக்கவில்லை.ஏனென்றால் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் அது நார்மலான ஸ்கோர் தான் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். எனினும் லக்னோ அணி பேட்ஸ்மேன்கள் நன்றாகவே விளையாடி வெற்றியை தேடி கொடுத்து இருக்கிறார்கள் என்று ருதுராஜ் பாராட்டினார். இந்த நிலையில் சிஎஸ்கே அணி தங்களுடைய அடுத்த போட்டியில் ஞாயிற்றுக்கிழமை விளையாட உள்ளது.