லக்னோ : 2024 ஐபிஎல் தொடரில் பந்துவீச்சாளர்களுக்கு அநீதி நடப்பதாக பதறிப் போய் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார் இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே போட்டி வடிவமைக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சுமத்தி இருந்தார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 26 போட்டிகளில் 200 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோர் எடுக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இடையிலான போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் மிகப் பெரிய ஸ்கோரை சேஸிங் செய்து பஞ்சாப் அணி வரலாறு படைத்தது.

அந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 261 ரன்கள் குவித்த நிலையில், அந்த ஸ்கோரை சேஸிங் செய்து வென்றது பஞ்சாப் கிங்ஸ். பேட்ஸ்மேன்கள் பார்வையில் பார்த்தால் இது மிகப் பெரிய சாதனை தான். ஆனால், பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை இரண்டு அணிகளின் பந்துவீச்சாளர்களுமே அதிக ரன்களை விட்டுக் கொடுத்து பரிதாபமாக காட்சி அளித்தனர்.
இந்த நிலையில் அந்தப் போட்டியின் முடிவில் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆபத்து.. பந்துவீச்சாளர்களை யாராவது காப்பாற்றுங்கள்" எனக் குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐபிஎல் தொடரை நடத்தும் பிசிசிஐ பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்களை தயார் செய்து, பந்துவீச்சாளர்களுக்கு அநீதி இழைத்து கிரிக்கெட்டை நாசமாக்கி வருவதாக ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில், இதற்கு முன்னாள் வீரரும், முன்னாள் இந்திய அணி பயிற்சியாளரும், ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வருபவருமான ரவி சாஸ்திரி பதிலடி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில் அஸ்வின் பெயரைப் குறிப்பிடாமல் அவரது பதிவின் கருத்துக்கு, பதிலடி கொடுத்து இருக்கிறார்.
ரவி சாஸ்திரியின் அந்த பதிவில், "இந்த ஐபிஎல் தொடரில் பந்துவீச்சாளர்கள் காலத்தை கடந்து வேலை செய்யும் பந்துவீச்சை கண்டு பிடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. வேலை செய்யாத உங்களின் திறன்களை வைத்துக் கொண்டு விக்கெட் எடுக்க முயற்சி செய்யாமல் உங்கள் பலம் மற்றும் கவனத்தை பின்பற்றுங்கள். புலம்பல் மற்றும் சோகமாக பேசுவதை நிறுத்தி விட்டு உங்கள் ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள்" என கூறப்பட்டு இருக்கிறது.
2024 ஐபிஎல் தொடரில் அஸ்வின் 8 போட்டிகளில் 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். ஒரு ஓவருக்கு சராசரியாக 9 ரன்களை வாரி இறைத்து இருக்கிறார். அதனால் ரவி சாஸ்திரி, அஸ்வினை தான் புலம்பாமல் போட்டியில் கவனம் செலுத்துமாறு கூறி இருப்பதாக தெரிகிறது.