மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக பந்து வீசிய வீரர் என்று ரசிகர்களால் மாயங் யாதவ் கொண்டாடப்பட்டு வந்தார். 21 வயதான மாயங் யாதவ் லக்னோ அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார். தாம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருதை மாயங் யாதவ் வென்றிருக்கிறார்.
பஞ்சாப் அணிக்கு எதிராக தாம் விளையாடிய முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி 27 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதேபோன்று ஆர் சி பி அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிராக மாயங் யாதவ் மணிக்கு 155.8 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனால் மாயங்கை ரசிகர்கள் கொண்டாடினர். அதன் பிறகு ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் அதைவிட அதிகமாக பந்து வீசி 156.7 கிலோமீட்டர் வேகத்தை பதிவு செய்தார்.
இதனால் இந்தியாவுக்கு ஒரு தங்கம் கிடைத்துவிட்டது என்று மாயங் யாதவை ரசிகர்கள் பார்த்தனர். இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இதுதான் அதிவேகமாக பந்து வீச்சாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருதினர். ஆனால் தற்போது வந்துள்ள ஒரு புள்ளி விவரம் படி மாயங் யாதவ் வீசிய பந்து ஐபிஎல் வரலாற்றில் வீசப்பட்ட டாப் 3 அதிவேக பந்து கூட கிடையாது என்று தெரியவந்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக பந்து வீசியவர் என்ற பெருமையை ஆஸ்திரேலிய வீரர் ஷான் டைட் பெற்று இருக்கிறார். 2011 ஆம் ஆண்டு இவர் 157.7 km வேகத்தில் வீசியதை தற்போது வரை சாதனையாக இருக்கிறது. இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து வீரர் லோகி பெகுர்சன் இருக்கிறார். இவர் 2022 ஆம் ஆண்டு மணிக்கு 157.3 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி இருக்கிறார்.
மூன்றாவது இடத்தில் சன்ரைசர்ஸ் அணியில் இருந்த காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக் இருக்கிறார். இவர் 2022 ஆம் ஆண்டு 157 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி இருக்கிறார். மாயங் யாதவ் இந்த பட்டியலில் 4வது இடத்தில் தான் இருக்கிறார். இவர் rcb எதிராக 156.7 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி இருக்கிறார். ஐந்தாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஆன்ரிச் நோக்கியா இருக்கிறார். இவர் 2020 ஆம் ஆண்டு 156.2 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி இருக்கிறார். எனினும் மாயங் தாம் 160 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்ததார். இந்த ரெக்கார்டை அவர் விரைவில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.