மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மைதானமான வான்கடேவில் வைத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சிறப்பாக பந்து வீசி மும்பை இந்தியன்ஸ் அணியை 145 ரன்களுக்கு சுருட்டி அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் பிளே - ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. 170 ரன்களை சேஸிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே ஓரளவு நன்றாக ஆடி இருந்தார். அவர் 35 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அந்த அணி 7 விக்கெட்களை இழந்த போதும் கடைசி இரண்டு ஓவர்களில் 32 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது.

அப்போது களத்தில் டிம் டேவிட் இருந்ததால் நம்பிக்கையுடன் இருந்தது மும்பை இந்தியன்ஸ். ஆனால் 19வது ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க், அதே ஓவரில் 5 பந்துகளில் 3 விக்கெட்களை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியை 145 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தார். அவரது அபாரமான பந்துவீச்சால் மும்பை இந்தியன்ஸ் அணியால் வெற்றிக்கு அருகே கூட செல்ல முடியவில்லை.
இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த போது அந்த அணி ஒரு கட்டத்தில் 57 ரன்களுக்கு ஐந்து விக்கெட்களை இழந்து இருந்தது. அப்போது வெங்கடேஷ் ஐயர் அபாரமாக பேட்டிங் செய்து 52 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார். அவர் ஆறு போர் மற்றும் மூன்று சிக்ஸர்களை அடித்து இருந்தார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடிய மனிஷ் பாண்டே 31 பந்துகளில் 42 ரன்களை சேர்த்து இருந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 169 ரன்கள் எடுக்க முக்கிய காரணமாக இருந்தனர்.
கொல்கத்தா அணி மிக குறைவான ரன்களை எடுத்ததாகவே அனைவரும் நினைத்தனர். ஆனால், அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி சேஸிங் செய்தபோது கொல்கத்தா அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் ஓவர்களில் ரன் எடுக்க முடியாமல் விக்கெட்களை இழந்து திணறினர். வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட்களையும், சுனில் நரைன் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இருவருமே தலா நான்கு ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தனர். அதே போல ஆண்ட்ரே ரசல் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். முக்கிய விக்கெட்களை எல்லாம் இவர்கள் மூவரும் வீழ்த்திய நிலையில் மிட்செல் ஸ்டார்க் துவக்க வீரர் இஷான் கிஷன் விக்கெட்டையும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி மூன்று விக்கெட்களையும் வீழ்த்தினார். அவர் 3.5 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 10 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியால் இனி பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாது.