மும்பை : 2029 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த இரண்டு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலையில் இந்த போட்டியில் மோதினர்.
இதுவரை 13 போட்டிகளில் 9 தோல்விகளை சந்தித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெற திட்டமிட்டது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் டக்அவுட் ஆனார். அடுத்து வந்த மார்க்கஸ் ஸ்டோனிஸ் 28, தீபக் ஹூடா 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் கே எல் ராகுல் நிதானமாக ஆடி வந்தார்.

இந்த நிலையில் ஐந்தாம் வரிசையில் இறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். அதுவரை மும்பை இந்தியன்ஸ் வசம் இருந்த போட்டி லக்னோ அணியின் பக்கம் மாறியது. 13 வது ஓவரில் நிக்கோலஸ் பூரன் இரண்டு சிக்ஸ், இரண்டு ஃபோர் அடித்தார். அந்த ஓவரில் 22 ரன்கள் கிடைத்தது. அதற்கு அடுத்து 14 வது ஓவரில் அவர் இரண்டு சிக்ஸ் அடிக்க, அந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது.
இந்த நிலையில் 15 வது ஓவரில் நிக்கோலஸ் பூரன் விக்கெட்டை வீழ்த்தவில்லை என்றால் போட்டி லக்னோ அணியின் பக்கம் சென்று விடும் எனும் நிலையில் அர்ஜுன் டெண்டுல்கரை பந்து வீச அழைத்தார் கேப்டன் ஹர்திக் பாண்டியா. அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸ் அடித்த நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.
இரண்டாவது பந்தை விசிய பின் அர்ஜுன் டெண்டுல்கருக்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்டதால் அவர் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். மீதமுள்ள நான்கு பந்துகளை வீச நமன் திர் வந்தார். அவரது பந்துவீச்சையும் விடாத நிக்கோலஸ் பூரன் ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ரன் எடுத்தார். அந்த ஓவரின் கடைசி பந்தை சந்தித்த ராகுல் ஒரு சிக்சடிதர். 15 வது ஓவரில் மட்டும் லக்னோ 29 ரன்கள் சேர்த்தது. பூரன் விக்கெட்டை வீழ்த்த நினைத்த ஹர்திக் பாண்டியா, லக்னோ அணி 6 பந்துகளில் 29 ரன்கள் குவித்ததை பார்த்து உறைந்து போனார்.
அதுவரை பத்துக்கும் கீழ் இருந்த ரன் ரேட் அந்த ஓவருக்கு பின் பத்துக்கு மேல் எகிறியது. அதன் பின்பு நிக்கோலஸ் பூரன் 29 பந்துகளில் 75 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்த பின் அடுத்த பந்திலேயே அர்ஷத் கான் டக் அவுட் ஆனார். அதற்கு அடுத்த ஓவரின் முதல் பந்தில் ராகுல் 55 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
மூன்று பந்துகளில் 3 விக்கெட் இழந்த போதும் லக்னோ அணியின் ஆயுஷ் பதோனி கடைசி ஓவரில் அதிரடி ஆட்டம் ஆடினார். இதை அடுத்து லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. ஆயுஷ் பதோனி 10 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் நுவான் துஷாரா 3 விக்கெட்களும், பியூஷ் சாவ்லா 3 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தனர்.