சிட்னி : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டிற்கான சீசனில் அதிக ஊதியம் பெற்ற வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பெற்று இருக்கிறார். அவ்வளவு ஏன் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகையான 24 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஸ்டார்க் சென்று இருக்கிறார்.
ஆனால் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாடி கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் ஆகப்போகிறது. அவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தான் விளையாடினார். இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் திரும்பி உள்ள மிட்செல் ஸ்டார்க்-க்கு 24 கோடியே 75 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கிறது.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடாமல் போனதால் இவ்வளவு பணத்தை நீங்கள் மிஸ் செய்து விட்டீர்களா என்று ஸ்டார்க்கிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் பணம் என்பது நிச்சயமாக நல்ல விஷயம்தான். அதுவும் எனக்கு இந்த ஆண்டு அது முக்கியமானதாக இருந்தது. ஆனால் அதை விட எனக்கு எப்போதுமே சர்வதேச கிரிக்கெட் தான் முக்கியம்.
ஐபிஎல் தொடர் விளையாடாமல் நான் இருந்ததால் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை தான் மேம்பட்டு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் நான் ஐபிஎல் தொடரிலிருந்து விளையாடாமல் விலகி இருந்தது குறித்து கொஞ்சம் கூட வருத்தப்படவே இல்லை. ஏனென்றால் ஐபிஎல்லில் இருந்து நான் விலகி இருந்த காலம் அது என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட்டை மேம்படுத்தியது.
ஐபிஎல் இல்லாத தருணத்தில் நான் ஓய்வில் இருந்து எனது உடலை பார்த்து கொண்டேன். அது என் உடலுக்கு தேவையான ஓய்வையும் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் விளையாட தேவையான புத்துணர்ச்சியும் கொடுத்திருக்கிறது.
இரண்டு மாதங்கள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்ததால் நான் என் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டேன் என்று ஸ்டார்க் கூறியுள்ளார்.
ஸ்டார்க் இதுவரை ஆர்சிபி அணிக்காக மட்டும் தான் விளையாடி இருக்கிறார். இதுவரை ஐபிஎல் போட்டியில் 27 ஆட்டங்களில் விளையாடி 34 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இம்முறை ஸ்டார்க் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு காரணம் ஐபிஎல் முடிந்த உடன் டி20 உலக கோப்பை நடைபெற இருக்கிறது. இதற்கு பயிற்சி களமாக இந்த தொடர் அமையும் என்பதற்காக தான் அவர் இம்முறை ஏலத்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.