சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணி தங்களது சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்த போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் நம்புகின்றனர்.
ஏனென்றால் சென்னை தனது சொந்த மண்ணில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வென்றது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி குறித்து பேசிய முகமது கைஃப் ரசிகர்களை கடுமையாக சாடியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் அதற்கு காரணம் தோனி தான் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதே சிஎஸ்கே அணி தோல்வியை தழுவினால் அதற்கு காரணம் ருதுராஜ் என்று சொல்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. இதேபோன்று கேகேஆர் அணி பலமாக விளங்குகிறது. அந்த அணியில் ஸ்டார் வீரர்கள் பலர் இருக்கிறார்கள்.
சேப்பாக்கம் மைதானம் எப்போதுமே சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இந்த வகையில் கே கே ஆர் அணியில் சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் ஆண்டிரூ ரசூல் போன்ற அதிரடி வீரர்கள் சிஎஸ்கே அணிக்கு நிச்சயம் சவால் அளிப்பார்கள். ஆனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜை எடுத்துக் கொண்டால் அவர் பேட்டிங்கில் தடுமாறுகிறார்.
அவர் மட்டுமில்லாமல் அந்த அணியில் உள்ள முக்கிய வீரர்கள் அனைவருமே சரிவர பேட்டிங் செய்வதில்லை. அதுமட்டுமல்லாமல் கேகேஆர் அணியில் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். மிச்செல் ஸ்டார்க்கின் அனுபவம் நிச்சயம் சிஎஸ்கேவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
ஆனால் சிஎஸ்கே அருகில் அப்படி ஒரு வேகப்பந்துவீச்சாளர் இல்லை. இதைப் போன்று அந்த அணியில் இருக்கும் தீபக்சாஹர், தேஷ் பாண்டே ஆகியோரும் எந்த நல்லதையும் அந்த அணிக்கு செய்யவில்லை. என்னை கேட்டால் கேகேஆர் அணி எளிதில் சிஎஸ்கேவை வீழ்த்தும் என்று நினைக்கிறேன் என முகமது கைப் தெரிவித்துள்ளார்.