சென்னை : முன்னாள் சிஎஸ்கே வீரரும், சிஎஸ்கே அணி பந்துவீச்சு பயிற்சியாளருமான லக்ஷ்மிபதி பாலாஜி தோனி குறித்து அதிரடியாக ஒரு கருத்தை கூறி இருக்கிறார். தற்போதைய நிலையில் உலகிலேயே மிக சக்தி வாய்ந்த அதிரடி பேட்ஸ்மேன் தோனி தான் எனக் கூறி இருக்கிறார்.
யாரும் எதிர்பாராத வகையில் 2024 ஐபிஎல் தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்து இருக்கிறார் தோனி. 42 வயதான தோனி, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்த உடன் முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன் பாதிப்பில் இருந்து அவர் முழுமையாக மீளவில்லை. எனினும், 2024 ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.

இதுவே அவரது கடைசி ஐபிஎல் தொடர் என கூறப்படும் நிலையில், கேப்டன் பதவியையும் ருதுராஜ் கெய்க்வாட் வசம் அளித்து ஒரு ஃபினிஷராக மட்டுமே ஆடி வருகிறார் தோனி. ஒவ்வொரு போட்டியிலும் கடைசி ஒன்று அல்லது இரண்டு ஓவர்களில் மட்டுமே பேட்டிங் செய்து வருகிறார். அப்படி அவர் பேட்டிங் செய்யும் சில பந்துகளில் அதிக ஃபோர், சிக்ஸர்களை அடித்து வருகிறார்.
2024 ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள தோனி 260 ஸ்ட்ரைக் ரேட்டில் 91 ரன்கள் எடுத்துள்ளார். 8 ஃபோர், 8 சிக்ஸ் அடித்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குறைந்தது 30 பந்துகளை சந்தித்த பேட்ஸ்மேன்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளவர் தோனி தான். தோனியின் இந்த பேட்டிங் செயல்பாடு குறித்து லக்ஷ்மிபதி பாலாஜி பாராட்டி பேசி இருக்கிறார்.
பாலாஜி கூறுகையில், "இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வலைப் பயிற்சிக்கு முன்பு வரை அவர் பேட்டை கூட தொடவில்லை. தோனி வேறு எந்த கிரிக்கெட் தொடர்களிலும் ஆடவில்லை. ஆனாலும், ஐபிஎல் தொடருக்கு சரியாக தன்னை தயார் செய்து கொண்டுள்ளார். அவர் நீண்ட நேரம் வலைப் பயிற்சி செய்கிறார். அதில் அதிரடியாக ஷாட் அடிப்பதே அவரது முக்கிய பயிற்சியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளைப் பார்க்கும் போது தோனி அதிக சக்தி வாய்ந்த பேட்ஸ்மேனாக மாறி இருக்கிறார். உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த அதிரடி பேட்ஸ்மேனாக மாறி இருக்கிறார். வேறு எந்த பேட்ஸ்மேனும் அவருக்கு அருகில் கூட வர முடியாது" என்றார்.