சென்னை : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஒன்பதாம் வரிசையில் பேட்டிங் இறங்கியது குறித்து பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் அதற்கு என்ன காரணம் என்பது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வட்டாரம் சில தகவல்களை கூறி இருக்கிறது.
2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் பதவியை விட்டு விலகிய தோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டும் இடம் பெற்று ஆடி வருகிறார். கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட் இடம் கொடுத்து விட்டார்.

இந்த நிலையில் தோனிக்கு முழங்காலில் தசைநார் கிழிசல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2023 ஐபிஎல் தொடரின் முடிவில் தோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் அவருக்கு அந்த இடத்தில் தசைநார் கிழிசல் இருந்தது. இந்த நிலையில் தான் அவர் 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்றார்.
தன்னால் முழு ஐபிஎல் தொடரிலும் ஆட முடியாது என்ற நிலையில் அவர் கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட் வசம் கொடுத்து விட்டதாக ஒரு பேச்சு இருந்தது. இந்த நிலையில் போட்டிகளில் கடைசி இரண்டு ஓவர்களின் போது மட்டும் வந்து பேட்டிங் செய்தார் தோனி.
அது குறித்து விமர்சனம் இருந்த போதும் தொடர்ந்து அவர் கடைசி ஒரு ஓவர் அல்லது இரண்டு ஓவர்களில் மட்டுமே பேட்டிங் செய்தார். அவர் பேட்டிங் செய்யும்போது பவுண்டரி அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார். சிங்கிள் ரன்கள் ஓடுவதை தவிர்த்து வந்தார். முதல் சில போட்டிகளில் அவர் ரன் ஓடும்போது அவரது தசைநார் கிழிசல் மேலும் பெரிதாகி விட்டதாகவும் அதனாலேயே அதன் பின் அவர் சிங்கிள் ரன்கள் ஓடுவதில்லை எனவும் கூறப்படுகிறது.
இடையே மருத்துவர்கள் அவரை ஓய்வு பெறுமாறு கூறி இருக்கின்றனர். ஆனால் சிஎஸ்கே அணியில் சரியான மாற்று விக்கெட் கீப்பர் இல்லை. சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டெவான் கான்வே இந்த ஆண்டு காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்கவில்லை. அடுத்து ஆரவல்லி அவனிஷ் என்ற இளம் விக்கெட் கீப்பர் மட்டுமே அணியில் இடம் பெற்றுள்ளார்.
மறுபுறம் சிஎஸ்கே அணியில் பல முக்கிய வீரர்கள் காயத்தால் ஆட முடியாத நிலையில் உள்ளனர். டெவான் கான்வே ஏற்கனவே காயத்தால் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக சரியான துவக்க வீரர்கள் இல்லாமல் சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது. ரச்சின் ரவீந்தரா முதலில் துவக்க வீரராக களம் இறங்கினார். ஆனால் அவரால் சரியாக ரன் சேர்க்க முடியவில்லை. அடுத்து அஜின்க்யா ரஹானே தற்போது துவக்க வீரராக ஆடி வருகிறார். அவரும் சரியாக செயல்படவில்லை.
அதுபோல மிடில் ஆர்டரில் டேரில் மிட்செல் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். பதிரானா, தீபக் சாஹர் மற்றும் முஸ்தஃபிசூர் ரஹ்மான் என மூன்று வேகப் பந்துவீச்சாளர்களும் இதுவரை நடந்த அனைத்து லீக் போட்டிகளிலும் பங்கேற்க முடியவில்லை. தற்போது இவர்கள் மூவரும் ஒட்டுமொத்தமாக தொடரில் இருந்து விலகி உள்ளனர்.
இப்படி சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்கள் காயத்தாலும், சரியான ஃபார்ம் இல்லாமலும் அவதிப்பட்டு வரும் நிலையில் சிஎஸ்கே அணியின் நிலை கருதியே தோனி போட்டிகளில் பங்கேற்று வருகிறார் என சிஎஸ்கே வட்டாரம் கூறியுள்ளது. அவரால் அதிக ஓவர்கள் நின்று பேட்டிங் செய்ய முடியாவிட்டாலும் கூட சிஎஸ்கே அணியின் பந்து வீச்சின் போது தன் அனுபவத்தை பயன்படுத்தி பந்து வீச்சாளர்களுக்கு யோசனை கூறுவதிலும், ஃபீல்டிங் நிறுத்துவதிலும் ஆலோசனை கூறி அணியின் வெற்றிக்காக பங்காற்றி வருகிறார். அதற்காகவே கடும் வலியுடன் அவர் விளையாடி வருவதாகக் கூறப்படுகிறது.