சென்னை : "தோனி ஒரு யுகபுருஷர், அவர் இமயமலையின் உச்சம். அவரைப் போன்ற ஒரு மகனை பெற்றெடுப்பது மிகவும் அரிது, அவருக்கு அழிவே இல்லை" என முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
தோனி இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆன போது அவரை பலரும் நவ்ஜோத் சிங் சித்து உடன் ஒப்பிட்டு பேசினர். அதற்கு காரணம் இந்திய அணியில் நவஜோத் சிங் சித்து அதிரடியாக சிக்சர் அடிக்கக்கூடியவர். அதன் பின் அவரைப் போன்று தோனியும் அதிரடியாக சிக்ஸர்களை அடித்ததால், அப்போது பலரும் தோனியை அடுத்த நவ்ஜோத் சிங் சித்து என குறிப்பிட்டு பேசி வந்தனர்.

அதன் பின் தோனி இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறி, கேப்டனாகி பின் கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக மாறி இருக்கிறார். இந்த நிலையில் 2024 ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெற இருக்கிறார். அது குறித்து நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியின் முடிவில் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பேசினார்.
நவ்ஜோத் சிங் சித்து பேசுகையில், "இந்த உலகம் சக்தி வாய்ந்தவர்கள் முன்னால் தான் தலை வணங்கும். பலவீனமானவர்களுக்கு முன்பு தலை வணங்காது. மக்களின் எண்ணங்கள் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எண்ணங்களே ஒரு மனிதனை கடவுளாகவோ அல்லது சாத்தானாகவோ மாற்றுகிறது. உலகில் நடக்கும் அத்தனை அதிசயங்களும் எண்ணங்களாலேயே நடக்கிறது. உங்கள் எண்ணங்களே உங்கள் செயல் மூலம் வெளிப்படுகிறது. அந்த வகையில் நேர்மறை எண்ணங்களின் உச்சமாவார் தோனி. அவர் இமயமலையின் உச்சம், அவர் ஒரு யுக புருஷர். அவர் என்று ஓய்வு பெறுகிறாரோ, அன்று ஒரு சகாப்தம் முடிவுக்கு வரும். மாபெரும் மனிதர்களை ஒரு தாய் பெற்றெடுப்பது என்பது மிகவும் அரிது. ஒரு மாபெரும் மனிதனின் புகழ் வளர்ந்து அவரைப் பற்றிய புகழ்ச்சிகள் உலகம் முழுவதும் பரவும். இது ஒவ்வொரு நொடியும் நடக்கும். அது போன்ற மனிதர்களை இந்த உலகம் ஒரு கல்வி நிலையம் போலவே பார்க்கும். என்னை போன்ற சாதாரண மனிதர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் ஒரு கல்வி நிலையம் போன்ற தோனி தொடர்ந்து பல தலைமுறைகளை ஈர்ப்பார். அவருக்கு அழிவே இல்லை" என்றார்.