"தோனியிடம் திறமை இருக்கு ஆனா டெக்னிக் இல்லை".. SRH வீரர் நிதிஷ் பேச்சால் சிஎஸ்கே ரசிகர்கள் கொதிப்பு
சென்னை : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வீரர் நிதிஷ்குமார் ரெட்டி தோனி குறித்து ஒரு பேட்டியில் பேசிய விஷயங்கள் பெரிய சர்ச்சையாக மாறி இருக்கிறது.
அவர் தோனி குறித்து மரியாதைக் குறைவாக பேசி விட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். குறிப்பாக விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசி, தோனியை மட்டம் தட்டி இருக்கிறார் என கொந்தளித்து வருகின்றனர்.

2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நல்ல ஆல் ரவுண்டராக விளங்கிய நிதிஷ் குமார், 303 ரன்களும், 3 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தார். அவரை ரசிகர்கள் பலரும் பாராட்டி வந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் தோனி மற்றும் விராட் கோலியை ஒப்பிட்டு பேசி இருந்தார்.
அதில், "தோனிக்கு திறமை உண்டு.. அதாவது அவருக்கு திறமை உண்டு, ஆனால் டெக்னிக் இல்லை. விராட் கோலி அளவுக்கு தோனியிடம் டெக்னிக் இல்லை" என்று நிதிஷ் குமார் ரெட்டி பேசி இருந்தார். அது தோனி ரசிகர்கள் இடையே கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. விராட் கோலியை விட தோனி மோசமான பேட்ஸ்மேன் என்று குறிப்பிடுவது போல அவர் பேசியிருந்ததை அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
சமூக வலை தளங்களில் நிதிஷ் குமாருக்கு எதிராக பலரும் பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் அவர் தனது பேட்டி குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார். அதில், "நான் மகி பாயின் (தோனியின்) மிகப்பெரிய ரசிகன். என்னிடம் திறமை முக்கியமா? அல்லது மனநிலை முக்கியமா? எனக் கேள்வி கேட்கப்பட்டது. நான் மனநிலை தான் முக்கியம் என பதில் அளித்தேன். அப்போது தோனியை அதற்கு உதாரணமாக கூறினேன். ஒரு வெற்றியை தீர்மானிப்பதில் மனநிலை மிக முக்கிய பங்கு வகிப்பதாக நான் நம்புகிறேன். எனது முந்தைய பேட்டியில் நான் கூறியதை சிலர் முழுமையாக வெளியிடாமல் கத்தரித்து வெளியிட்டு வருகின்றனர். தவறான விஷயங்களை பரப்ப வேண்டாம். முழு கதையையும் கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள்." என அவர் தனது விளக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications