சென்னை : தோனிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குமான உறவை ஒட்டுமொத்த இந்தியாவும் அறியும். தோனி இந்தியாவுக்காக விளையாடிய போது கிடைத்த ரசிகர்களை விடவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் ஆடிய போது அவருக்கு கிடைத்த ரசிகர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம்.
எண்ணிக்கையில் மட்டுமல்லாது ரசிகர்களுக்கும், தோனிக்குமான உறவு இன்னும் பல மடங்கு அதிகமானது சிஎஸ்கே அணிக்காக அவர் ஆடிய போது தான். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து இடம் பெற்று வரும் தோனி அது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மனம் விட்டு பேசி இருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவருக்கு மிகப்பெரிய மரியாதை அளிக்கப்படுகிறது. அது குறித்து அவர் பேசிய போது, "ஒரு அணியை வழிநடத்தும் போது மக்களின் மரியாதையை நாம் சம்பாதிக்க வேண்டும். நாம் அதிகாரம் செலுத்தி அல்லது எனக்கு மரியாதை அளிக்க வேண்டும் என கேட்டு மரியாதையை பெற முடியாது. அதை நீங்கள் சம்பாதிக்க வேண்டும். நான் ஒரு இடத்தில், ஒரு பதவியில் இருக்கலாம். அந்த பதவிக்கு என்று ஒரு மரியாதை இருக்கும். ஆனால், அந்த பதவியில் அமரும் தனிநபரான நான் எனக்கான மரியாதையை சம்பாதிக்க வேண்டும். என்னை எனக்கு மரியாதை தாருங்கள் என்று கேட்டு, நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களிடமிருந்து நாம் மரியாதையை பெற முடியாது. மாறாக சுற்றி இருக்கும் மனிதர்கள் உங்களை மதித்தால், மற்றவர்கள் அதைவிட 10 அல்லது 15 சதவீதம் அதிக மரியாதையை அளிப்பார்கள்." என்றார்.
மேலும், "இந்தியா இந்த விஷயத்தில் வித்தியாசமானது. மக்கள் தொழில்முறையாக நடந்து கொள்வது பற்றி பேசுகிறார்கள். ஆனால், இந்தியர்கள் தொழில்முறையானவர்கள் மட்டுமல்ல, உணர்வுப் பூர்வமான பந்தத்தை அதிகமாக கொண்டு இருப்பவர்கள். ஒரு இந்தியனாக எனது வலிமை என்பது உணர்வுப் பூர்வமான பந்தம் தான். எனக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான பந்தமும் உணர்வு பூர்வமான பந்தம் தான். நான் ஒரு வீரராக, அந்த அணியில் இரண்டு மாதங்கள் விளையாடிவிட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று விடுவது இல்லை. அதைத் தாண்டிய பந்தம் உள்ளது" என்றார் தோனி.