சென்னை : 2025 ஐபிஎல் தொடருக்கு முன் தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து நீக்க வேண்டும். அதன் மூலம் அவருக்கு அளிக்கப்படும் 12 கோடி சம்பளம் மிச்சம் ஆகும் என முன்னாள் வீரர் இர்பான் பதான் பேசி இருக்கிறார்.
2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றில் தனக்கான 14 போட்டிகளிலும் விளையாடி முடித்துள்ளது. பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்த நிலையில் அந்த அணி 2025 ஐபிஎல் தொடருக்கான திட்டங்களை இப்போதே சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் துவக்கத்திலேயே தோனி சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியை விட்டு விலகினார். ருதுராஜ் கேப்டன் ஆனார். தோனிக்கு இதுவே கடைசி கிரிக்கெட் தொடர், அவர் ஓய்வு பெற்று விடுவார் என பலரும் கூறினாலும் அவர் 2025 ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என தோனிக்கு நெருக்கமான வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ராபின் உத்தப்பா கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் வீரர் இர்பான் பதான் அதிரடியாக ஒரு கருத்தை கூறியிருக்கிறார். தோனி 2024 ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் சில பந்துகளை மட்டுமே சந்தித்தார். மொத்தம் 14 போட்டிகளில் அவர் 73 பந்துகளை மட்டுமே சந்தித்தார். இனி இப்படி குறைந்த பந்துகளை மட்டும்தான் சந்திக்கப் போகிறார் என்றால் அவரை சிஎஸ்கே அணியை விட்டு நீக்க வேண்டும். அதன் மூலம் மிகப்பெரிய தொகையாக அவருக்கு அளிக்கப்படும் சம்பளம் மிச்சமாகும் என கூறியிருக்கிறார்.
இர்பான் பதான் பேசுகையில், "2025 ஐபிஎல் தொடரில் தோனியை தக்க வைக்க வேண்டும் என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப் பெரிய தொகையை (தற்போதைய சம்பளம் 12 கோடி) அளிக்க வேண்டி இருக்கும். என்னை கேட்டால் நீண்ட கால அடிப்படையில் தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைக்க கூடாது. ஒவ்வொரு போட்டியிலும் தோனி மூன்று அல்லது நான்கு பந்துகளை தான் ஆடப் போகிறார் என்றால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் அல்லது தோனி மூன்று அல்லது நான்கு ஓவர்களுக்கு பேட்டிங் செய்ய ஒப்புக் கொள்ள வேண்டும். "அணிக்காக ஆடும் வீரர்கள் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேவை, ரசிகர்களுக்காக ஆடும் வீரர்கள் வேண்டாம்" என தோனியே ஒருமுறை கூறியிருக்கிறார். ஆனால் அவரே அதை இப்போது செய்து இருக்கிறார்." என கடுமையாக பேசியிருக்கிறார்.