சென்னை: 2024 ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெற்று விட்டார் என சமூக வலை தளங்களில் தகவல் பரவிய நிலையில் தற்போது இரண்டு சிஎஸ்கே வீரர்கள் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என அவர்கள் சூசகமாக குறிப்பிட்டு இருக்கின்றனர்.
சிஎஸ்கே அணியைச் சேர்ந்த மதிஷா பதிரானா மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர், "2025 ஐபிஎல் தொடரில் தோனியை பார்க்கலாம்" என தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அளித்த பேட்டியில், "2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என எதிர்பார்க்கிறோம்" என்று கூறி இருக்கிறார்.

இதன் மூலம் சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் சக வீரர்களிடம் தான் அடுத்த ஆண்டு விளையாட இருப்பதை தோனி தெரியப்படுத்தி இருக்கிறார் எனவும், அதன் காரணமாகவே அவர்கள் இதுபோன்ற பதிவுகளை ஒரே நேரத்தில் வெளியிட்டு வருகின்றனர் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தற்போது 42 வயதில் 2024 ஐபிஎல் தொடரில் தோனி பங்கேற்றார். அவருக்கு முழங்காலில் கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், காலில் வலியுடன் தான் அவர் போட்டிகளில் பங்கேற்று வந்தார். அவரால் சிங்கிள் ரன்கள் ஓட முடியாததால் கடைசி ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் மட்டுமே களமிறங்கி அதிரடியாக சிக்ஸர் அடித்து ரன் குவித்து வந்தார்.
2023 ஐபிஎல் தொடரில் 12 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த தோனி அதில் 73 பந்துகளை மட்டுமே சந்தித்து 161 ரன்கள் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 220 ஆக இருந்தது. இந்த நிலையில் அவர் மீண்டும் 2025 ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என கூறப்படுகிறது.
அவர் நிச்சயம் உடற் தகுதியை மேம்படுத்திக் கொண்ட பின்னரே ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என தெரிகிறது. 2023 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை லீக் சுற்றில் வெளியேறியது. எனவே, சிஎஸ்கே அணியை கோப்பை வெல்ல வைத்த பின்னர் தான் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் ஒரு பேச்சு நிலவுகிறது.