IPL 2024: தோனிக்கு லண்டனில் அறுவை சிகிச்சை? காலில் கடும் வலி.. உடைந்து போன சிஎஸ்கே ரசிகர்கள்
சென்னை : தோனிக்கு விரைவில் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்ற தோனி அதிக நேரம் பேட்டிங் செய்ய முடியாமல் திணறினார். இதை அடுத்து அவர் ஒவ்வொரு போட்டியிலும் சில பந்துகளை மட்டுமே சந்தித்தார். அப்போதே அவருக்கு காலில் தசைநார் கிழிசல் இருப்பதாக தகவல் வெளியானது.
அந்த பிரச்சனையால் காலில் வீக்கம் மற்றும் வலியுடன் தோனி போட்டிகளில் பங்கேற்று வந்தார். தற்போது 2024 ஐபிஎல் தொடர் முடிந்துள்ள நிலையில் அவர் விரைவில் லண்டனுக்கு செல்ல உள்ளதாகவும், அங்கே அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டும் இதே போன்ற ஒரு நிலையில் தான் இருந்தார். 2023 ஐபிஎல் தொடரின் முடிவிலும் தோனிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் அவருக்கு மீண்டும் காலில் தசைநார் கிழிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் மீண்டும் 2025 ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க விரும்புவதாக கூறப்படுகிறது. அதற்கு தன்னை தயார் செய்து கொள்ள விரும்பும் அவர், விரைவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அதன் பின் சுமார் ஆறு மாதங்கள் அதில் இருந்து மீண்டு, முழு உடற் தகுதியுடன் வர திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆறு மாதங்கள் வரை எல்லாம் திட்டமிட்டபடி நடக்கிறதா? என பார்த்து பின்னர், சிஎஸ்கே நிர்வாகத்திடம் தனது ஓய்வு முடிவை குறித்து அறிவிப்பார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், காலில் வலியுடன் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்று இருப்பது சிஎஸ்கே ரசிகர்களை நெகிழ்ச்சியிலும், அதே சமயம் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. தோனி விரைவில் முழு அளவில் மீண்டு வந்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர்.
2024 ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிய நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் தோனிக்காகவாவது சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications