மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் விலை மதிப்பு மிக்க அணியாக கருதப்படுவது மும்பை இந்தியன்ஸ் அணிதான். களத்திலும் மும்பை அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறது. இந்த நிலையில் கடைசி மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மும்பை அணி ஒருமுறை கூட இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டது அந்த அணியில் பெரும் விரிசலை ஏற்படுத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகிறது. 2024 ஆம் ஆண்டு சீசனில் மும்பை அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே தோல்வியை தழுவி இருக்கிறது.

குறிப்பாக குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 169 ரன்களை எட்ட முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது. அதன் பிறகு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி பந்துவீச்சில் 277 ரன்கள் விட்டுக் கொடுத்தது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த போட்டியில் முதல் 10 ஓவரில் அபாரமாக விளையாடிய நிலையில் கடைசியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது.
இதனால் கடுப்பான மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி, களத்திலேயே மும்பை வீரர்களை அழைத்து திட்டிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. போட்டி முடிந்தவுடன், சச்சின், ஹர்திக், ரோகித் சர்மா மற்றும் சில வீரர்களை அழைத்த ஆகாஷ் அம்பானி அவர்களுடன் கோபமாக பேசிக் கொண்டிருந்தார்.
களத்தில் வீரர்கள் ஒரே அணியாக விளையாடவில்லை என்று அவர் கடினமாக பேசி இருக்கிறார். மேலும் இது போல் விளையாடினால் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஹர்திக் பாண்டியாவிடம் ஆகாஷ் அம்பானி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மேலும் மூத்த வீரரான ரோகித்தும் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என்று அவர் அறிவுரை கூறியிருக்கிறார்.
இதனை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தங்களுடைய அறைக்கு சென்றபோது, சச்சின் டெண்டுல்கர் அனைவரையும் அழைத்து சமாதானப்படுத்தினார். இந்த போட்டியில் 277 ரன்கள் அடிக்கப்பட்டும் மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமாக பேட்டிங் செய்ததாகவும், முதல் 10 ஓவரில் 140 ரன்கள் வரை எடுத்ததே இதற்கு சாட்சி என்றும் சச்சின் கூறினார். மேலும் இது குறித்து மிகவும் யோசிக்காமல் அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும் என்று அவர் வீரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.