மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முந்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது 2024 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் கடைசி இடத்தை பெற்று சுக்கு நூறாக உடைந்து போய் உள்ளது.
அந்த அணியின் முக்கிய வீரர்கள் அணியை விட்டு விலகப் போகிறார்கள் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் அதைவிட முக்கியமாக சிஎஸ்கே அணியை விட அதிக ஐபிஎல் கோப்பைகள் வெல்ல வேண்டும் என்ற போட்டா போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தனது முக்கிய சொத்துக்களை இழந்துள்ளது. அதாவது ஒரு ஐபிஎல் அணியின் முக்கிய சொத்தாக பார்க்கப்படும் ரசிகர்களை இழந்துள்ளது.

ஒரு ஐபிஎல் அணிக்கு கோப்பை வெல்வதை விட அதிக ரசிகர்கள் இருந்தால் தான் ஒவ்வொரு ஆண்டும் லாபம் சம்பாதிக்க முடியும். அதிக ரசிகர்களைக் கொண்ட அணிகளுக்கு அதிக விளம்பர வருவாய் மற்றும் டிக்கெட் வருவாய் கிடைக்கும். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி 2024 ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு வரை இந்தியாவிலேயே அதிக ரசிகர்களை கொண்ட அணியாக இருந்தது.
ஆனால், 2024 ஐபிஎல் ஏலத்துக்கு முன் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக அறிவித்த பின் அந்த அணி ரசிகர்களை இழக்கத் தொடங்கியது. ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதும், ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததும், சிஎஸ்கே அணியை விட அதிக கோப்பைகளை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே செய்யப்பட்டதாக ஒரு பேச்சு உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் கடைசியாக 2020இல் ஐபிஎல் கோப்பை வென்று இருந்தது. அப்போது மூன்று கோப்பை மட்டுமே வென்று இருந்த சிஎஸ்கே அணி அதன் பின் 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் கோப்பைகளை வென்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கோப்பை எண்ணிக்கையை சமன் செய்தது.
இந்த நிலையில் தான் தங்கள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்து அவரை நீக்க முடிவு செய்தனர். குஜராத் அணிக்கு ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்து அந்த அணியை இரண்டு முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றவர் என்ற அடிப்படையில் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அழைத்து வந்து கேப்டன் ஆக்கினர்.
ஆனால் அந்த முடிவால் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரர்களான பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா போன்றோர் அணியை விட்டு விலகும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி முக்கிய சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை கொண்ட அணியாக முதல் இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 1.39 கோடி ரசிகர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை முந்தி தற்போது 1.47 கோடி ரசிகர்களை வைத்துள்ளது. அதேபோல சிஎஸ்கே அணி 1.6 கோடி ரசிகர்களை கொண்டு அதிக ரசிகர்களை கொண்ட அணியாக மாறி உள்ளது. சிஎஸ்கே அணியை விட அதிக கோப்பைகள் வெல்ல வேண்டும் என ஆசைப்பட்ட மும்பை இந்தியன்ஸ், தற்போது ரசிகர்களை இழந்து, வீரர்களையும் இழக்கப் போகிறது.