மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து இரண்டு முக்கிய வீரர்கள் நீக்கப்படுவார்கள் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்து இருக்கிறார்.
2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததால் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு, அந்த அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 லீக் போட்டிகளில் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே பிடித்தது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பு அந்த அணி நிச்சயம் இரண்டு வீரர்களை அணியில் இருந்து நீக்கும் என குறிப்பிட்டு இருக்கிறார் ஆகாஷ் சோப்ரா. ரோஹித் சர்மாவை அந்த அணி கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய போதே அடுத்த ஆண்டு அவர் அந்த அணியில் இடம் பெற மாட்டார் என கூறப்பட்டது. அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோஹித் சர்மாவை நீக்கலாம் அல்லது ரோஹித் சர்மா தாமாகவே முன்வந்து அந்த அணியில் இருந்து விலகும் முடிவை எடுக்கலாம் என ஆகாஷ் சோப்ரா கூறினார்.
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கு விசுவாசமாக இருக்கும் இஷாந்த் கிஷனையும் அந்த அணி மெகா ஏலத்திற்கு முன் தக்க வைக்காது என கூறி அதிர வைத்து இருக்கிறார் ஆகாஷ் சோப்ரா. அவருக்கு 15.5 கோடி சம்பளம் அளிக்கப்படுகிறது. அந்த சம்பளம் மிகவும் அதிகம் என்பதால் அவரை ஏலத்தில் விடுவித்துவிட்டு பின் "ரைட் டூ மேட்ச்" விதியை பயன்படுத்தி மீண்டும் குறைந்த சம்பளத்தில் அணிக்கு கொண்டு வருவார்கள் என்று கூறினார்.
இது பற்றிய அவர் கூறுகையில், "மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இஷான் கிஷனை வெளியேற்றுவார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் ரைட் டூ மேட்ச் கார்டை பயன்படுத்தி அவரை மீண்டும் வாங்கலாம். ஏனெனில், அவருக்கு 15.5 கோடி சம்பளம் என்பது சற்று அதிகம். எனவே, அவரை தக்க வைக்க மாட்டார்கள். அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியில் தனது கடைசி போட்டியை ரோஹித் சர்மா விளையாடிவிட்டார் என்று நான் நினைக்கிறேன். ஒன்று அந்த அணி அவரை தக்க வைக்காது அல்லது அவர் அந்த அணியை விட்டு விலகி விடுவார். எப்படி பார்த்தாலும் மும்பை இந்தியன்ஸ்-உம், ரோஹித் சர்மாவும் பிரிந்து விடுவார்கள். இனிமேலும் நாம் மும்பை இந்தியன்ஸ் உடையில் ரோஹித் சர்மாவை பார்க்க முடியாது. நான் சொல்வது தவறாக கூட இருக்கலாம். ஆனால், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார்" என்றார்.