மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இளம் வீரர்களான மதுஷங்கா மற்றும் கோட்சியே இருவரும் காயமடைந்துள்ள சம்பவம் அந்த அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2020ஆம் ஆண்டுக்கு பின் மும்பை இந்தியன்ஸ் அணி ஒருமுறை கூட ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல முடியவில்லை. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேப்டன் ரோகித் சர்மாவை மாற்றிவிட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை அணிக்குள் கொண்டு வந்துள்ளது. அதேபோல் இளம் வீரர்கள் பலரையும் தேடி அணியை பலப்படுத்தியுள்ளது.

குறிப்பாக கடந்த சில சீசன்களாக மும்பை அணியின் பவுலிங் மோசமாக அமைந்தது. அதனை சரி செய்யும் வகையில் பயிற்சியாளர் மலிங்காவை அணிக்குள் கொண்டு வந்தது. அதேபோல் ஐபிஎல் ஏலத்தில் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக பவுலிங் செய்த இலங்கை அணியை சேர்ந்த தில்ஷன் மதுஷங்காவை ரூ.4.6 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்தது.
அதேபோல் தென்னாப்பிரிக்கா அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான கோட்சியேவை ரூ.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. ஏற்கனவே பும்ரா இருக்கும் சூழலில், இவர்கள் இருவரையும் முதன்மை பவுலர்களாக மும்பை அணி நிர்வாகம் பயன்படுத்த திட்டமிட்டு வந்தது. இந்த நிலையில் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு 5 நாட்களே உள்ள நிலையில், இரு வீரர்களும் காயமடைந்துள்ளனர்.
வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வந்த மதுஷங்காவின் இடது கால் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 4 வாரங்கள் வரை ஐபிஎல் போட்டியில் மதுஷங்கா விளையாடுவது சந்தேகம் தான் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் தென்னாப்பிரிக்கா அணியின் கோட்சியே மும்பை வந்துவிட்டாலும், காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இடுப்பில் ஏற்பட்ட காயத்தில் இருந்து கோட்சியே குணமடைந்து வரும் சூழலில், மும்பை இந்தியன்ஸ் அணியின் மருத்துவக் குழு அவரை பரிசோதனை செய்து வருகிறது. இதனால் அவர் முதல் போட்டியில் களமிறங்குவாரா என்ற கேள்விக்கு, மார்ச் 23ஆம் தேதியன்றே பதில் கிடைக்கும். ஏற்கனவே சிஎஸ்கே அணியின் 4 வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில், அந்த அணியின் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். தற்போது அதேபோல் மும்பை அணி வீரர்களும் காயமடைந்து வருவது பல்தான்ஸ் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.