மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் மகேந்திர சிங் தோனி, கடைசி கட்டத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார். இதனால் தோனியை இந்திய டி20 அணிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுக்கும் அளவுக்கு அவருடைய பார்ம் இருந்தது.
இந்த நிலையில் கடைசி இரண்டு போட்டிகளில் தோனி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சிஎஸ்கே அணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தாலும், தோனி அதே 19வது ஓவரில் தான் களமிறங்கினார்.

குறிப்பாக பஞ்சாப் அணிக்கு எதிராக 18 வது ஓவரில் தோனி களமிறங்கியபோது ராகுல் சாகரை, ஷாம்கரன் பந்து வீச அழைத்தார். அதில் தடுமாறிய தோனி வெறும் இரண்டு ரன்கள் தான் சேர்த்தார். இதனை குறிப்பிட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்து, தோனிக்கு சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ளும் திறன் குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் யாருமே எதிர்பார்க்க முடியாத ஒன்றை பஞ்சாப் அணி அன்றைய ஆட்டத்தில் செய்து விட்டது. இன்னும் சொல்லப்போனால் தோனியின் மருந்தையே அவருக்கே பஞ்சாப் அணி கொடுத்து விட்டது. தோனி அந்த கட்டத்தில் வேகப்பந்துவீச்சாளரை எதிர்பார்த்து இருப்பார். ஆனால் சுழற் பந்துவீச்சாளரை பயன்படுத்தி பஞ்சாப் அணி அவரை ஏமாற்றி விட்டது.
நீங்கள் தோனியின் பயிற்சியை பாருங்கள். அவர் வலைப்பயிற்சியில் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு தான் சிக்ஸர்களை அடித்து நொறுக்கினார். சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் எந்த பயிற்சியும் செய்யவில்லை. இந்த முழு தொடரிலும் தோனி மொத்தமாகவே ஆறு ஓவரை தான் வீசி இருப்பார். அந்த ஆறு ஓவருமே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தான் அமைந்தது.
இந்த தருணத்தில் தான் பஞ்சாப் அணி கேப்டன் ஷாம்கரன் மாஸ்டர் ஸ்ட்ரோக்காக சுழற் பந்துவீச்சாளரை பயன்படுத்தி அசத்தினார். தோனி கடந்த ஏழு எட்டு மாதங்களாக எந்த பயிற்சியும் செய்யவில்லை. இந்த கட்டத்தில் அவர் சுழற் பங்குவீச்சாளரை எதிர்கொண்டு இருக்க மாட்டார். தோனிக்கு தற்போது இந்த குறை இருக்கிறது. அதனை அவர் சரி செய்ய வேண்டும். இல்லையெனில் மற்ற அணிகளும் இதே டெக்னிக்கை பயன்படுத்த கூடும் என்று நவ்ஜோத் சிங் சித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.