சென்னை : 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கப்பட்ட போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னைத்தான் ஏலத்தில் வாங்க இருந்தது. அப்போது நான் ஏலத்தில் பங்கேற்று இருந்தால், நான் சிஎஸ்கே அணியின் கேப்டன் ஆகி இருப்பேன் என முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் அதிரடியாக பேசியிருக்கிறார்.
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கப்பட்ட போது, ஒவ்வொரு அணியும் தங்கள் பகுதியை சேர்ந்த நட்சத்திர இந்திய வீரரை "ஐகான் வீரர்" என்ற பெயரில் நேரடியாக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என ஒரு விதி இருந்தது. அப்போது சென்னையை சேர்ந்த நட்சத்திர இந்திய வீரர்கள் யாரும் இல்லாததால் சிஎஸ்கே அணி அந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை. அனைத்து வீரர்களையும் ஏலத்தில் வாங்க வேண்டிய நிலையில் இருந்தது.

இந்த நிலையில் சிஎஸ்கே நிர்வாகம் அதிரடி பேட்ஸ்மேனான வீரேந்தர் சேவாக்கை எப்படியாவது தங்கள் அணிக்கு கொண்டு வந்து விட வேண்டும், அவரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஆக்கிவிட வேண்டும் என திட்டமிட்டு இருந்தது. அப்போது அது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் தன்னிடம் பேசியதாக கூறியிருக்கிறார் சேவாக்.
அப்போது தன்னை ஏலத்தில் பங்கேற்குமாறு சிஎஸ்கே நிர்வாகி வி.பி சந்திரசேகர் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் தான் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஐகான் வீரராக ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், தான் ஏலத்தில் பங்கேற்காததால் சிஎஸ்கே அணி தோனியை ஏலத்தில் வாங்கி, அவரை கேப்டன் ஆக்கியது எனவும் கூறி இருக்கிறார் சேவாக்.
இது குறித்து சேவாக் பேசுகையில், "அப்போது சிஎஸ்கே அணியில் வி.பி சந்திரசேகர் தான் வீரர்களை தேர்வு செய்தார் அவர் எனக்கு போன் செய்தார். "சிஎஸ்கே அணியில் நீங்கள் விளையாட வேண்டும். டெல்லி டேர்டெவில்ஸ் உங்களை அவர்களின் ஐகான் வீரராக்க முயற்சி செய்கிறது. அவர்களின் அழைப்பை நீங்கள் ஏற்க வேண்டாம்" என என்னிடம் கூறினார். "நான் சரி பார்க்கலாம்" என்று மட்டும் சொன்னேன்." என்றார்.
மேலும், "நான் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஒப்பந்தத்தை பெற்று அவர்களின் ஐகான் வீரராக ஆனேன். ஏலத்திற்கு நான் செல்லவில்லை. ஒருவேளை நான் ஏலத்திற்கு சென்று இருந்தால் சிஎஸ்கே அணி என்னை வாங்கி இருக்கும். அவர்கள் அணியின் கேப்டனாகவும் என்னை நியமித்து இருப்பார்கள். ஆனால் அதன் பின் அவர்கள் தோனியை ஏலத்தில் வாங்கியதோடு, அவரை கேப்டன் ஆகவும் ஆக்கினார்கள்" என்றார் சேவாக்.