மும்பை : 2024 ஐபிஎல் தொடர் அதன் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் 12 லீக் போட்டிகளே மீதம் உள்ளன. இந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும்? பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற பத்து அணிகளுக்கும் எத்தனை சதவீத வாய்ப்பு உள்ளது? என்ற புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.
அதன்படி பார்க்கும்போது மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு மூன்று அணிகள் கடும் மோதலில் ஈடுபட உள்ளன.

இதுவரை நடந்த போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் 12 போட்டிகளில் 8 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளன. இதை அடுத்து இரண்டு அணிகளுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டன. அதே போல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தாங்கள் ஆடிய 11 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகள் பெற்று முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. இந்த இரண்டு அணிகளும் இனி வரும் போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தான் ஆடிய 12 போட்டிகளில் ஏழு வெற்றிகள் பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியல் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த அணி பிளே-ஆஃப் செல்ல 93.8 சதவீத வாய்ப்பு உள்ளது. ஹைதராபாத் அணி தனக்கு மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வென்றால் மிக உறுதியாக முன்னேறும். ஒருவேளை இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தாலும் கூட நெட் ரன் ரேட் அடிப்படையில் முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது.
அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் ஆறு வெற்றிகள் பெற்று 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த அணிக்கு 73.4 சதவீத பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது. அதன்படி இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்று அதிக நெட் ரன் ரேட் வைத்திருந்தால் சிஎஸ்கே அணி நிச்சயம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிடும்.
அடுத்து டெல்லி கேப்பிட்டல் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் 49.5 சதவீத வாய்ப்பை வைத்துள்ளன. இந்த இரண்டு அணிகளுக்கும் பிளே ஆஃப் செல்ல சரிசமமான வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை சிஎஸ்கே அணி அடுத்து வரும் மூன்று போட்டிகளில் மோசமான தோல்விகளை சந்தித்தால் டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். அடுத்து பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு மிகச் சிறிய வாய்ப்பு உள்ளது. பெங்களூர் அணிக்கு 16.4 சதவீத வாய்ப்பும், குஜராத் அணிக்கு 7.8% வாய்ப்பும் உள்ளது.
2024 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் வாய்ப்பு சதவீதம் (12 லீக் போட்டிகள் மீதமுள்ள நிலையில்..)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 100
ராஜஸ்தான் ராயல்ஸ் - 100
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 93.8
சென்னை சூப்பர் கிங்ஸ் - 73.4
டெல்லி கேப்பிடல்ஸ் - 49.5
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 49.5
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 16.4
குஜராத் டைட்டன்ஸ் - 7.8
மும்பை இந்தியன்ஸ் - 0
பஞ்சாப் கிங்ஸ் - 0