மும்பை : 2024 ஐபிஎல் தொடரின் லீக் சுற்று கடைசி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் 14 லீக் போட்டிகள் மட்டுமே உள்ளன.
இந்த நிலையில் எந்த அணியும் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யவில்லை. பத்து அணிகள் ஆடும் 2024 ஐபிஎல் தொடரில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பெறும் அணிகளே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

அந்த வகையில் தற்போது புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு மிக மிக அதிகமாக உள்ளது. அந்த இரண்டு அணிகளும் தங்களின் மீதமுள்ள போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் அதிக நெட் ரன் ரேட் வைத்திருந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நிலையில் உள்ளன. ஒருவேளை மீதமுள்ள போட்டிகளில் மிக மோசமாக ஆடி நெட் ரன் ரேட்டை பாதாளத்துக்கு கொண்டு சென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் போகும் நிலை ஏற்படும்.
புள்ளிப் பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களுக்கு நான்கு அணிகள் முட்டி மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் என அந்த நான்கு அணிகளும் புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் உள்ளன. இந்த நான்கு அணிகளும் இனி வரும் போட்டிகளில் குறைந்தது இரண்டு வெற்றிகளை பெற்று அதிக நெட் ரன் ரேட் வைத்து இருந்தால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம். எனவே இந்த நான்கு அணிகளும் கிட்டத்தட்ட அரை இறுதி போன்ற சூழ்நிலையில் தான் இனிவரும் போட்டிகளை விளையாட வேண்டும்.
புள்ளிப் பட்டியலில் கடைசி நான்கு இடங்களில் இருக்கும் பெங்களூரு, பஞ்சாப், குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு மிக மிக அரிதாக உள்ளது. அதாவது பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு மூன்று சதவீத வாய்ப்பு உள்ளது. குஜராத் அணிக்கு இரண்டு சதவீத வாய்ப்பும், மும்பை அணிக்கு ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்பும் உள்ளது.
2024 ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளுக்கு இருக்கும் வெற்றி வாய்ப்பு சதவீதம் -
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 99%
ராஜஸ்தான் ராயல்ஸ் - 97%
சென்னை சூப்பர் கிங்ஸ் - 59%
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 56%
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - 49%
டெல்லி கேபிடல்ஸ் - 32%
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 3%
பஞ்சாப் கிங்ஸ் - 3%
குஜராத் டைட்டன்ஸ் - 2%
மும்பை இந்தியன்ஸ் -0%