IPL 2024: அஸ்வின் செய்த இந்த தவறால் தான் ராஜஸ்தான் தோற்றது.. விளாசிய ரசிகர்கள்.. என்ன நடந்தது?
சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றின் இரண்டாவது தகுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம், ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வி அடைந்து இருந்தது.
இந்தத் தோல்விக்கு ராஜஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் தான் முக்கிய காரணம் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் ஓவரை ட்ரென்ட் போல்ட் வீசினார். அடுத்த ஓவரை வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் வீசுவார் என எதிர்பார்த்த நிலையில், அஸ்வின் இரண்டாவது ஓவரை வீசினார். தொடர்ந்து இரண்டு ஓவர்கள் வரை அஸ்வின் வீசினார். அந்த இரண்டு ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

மாறாக ட்ரென்ட் போல்ட் தனது முதல் மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். இந்த நிலையில் அஸ்வினுக்கு பதிலாக வேறு ஒரு வேகப் பந்துவீச்சாளர் பந்து வீசி இருந்தால் நிச்சயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் பவர் பிளே ஓவர்களில் அதிக ரன் குவித்து இருக்க முடியாது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
போட்டி நடந்த சேப்பாக்கம் மைதானத்தில் பிட்ச் நேரம் ஆக, ஆக சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைத்தது. அந்த வகையில் பார்த்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் 8 ஓவர்களுக்கு பின்பு அஸ்வின் மற்றும் சாஹலை தொடர்ந்து 8 ஓவர்கள் வீச வைத்து இருந்தால் ஹைதராபாத் அணிக்கு அது அழுத்தத்தை அதிகரித்திருக்கும் என விமர்சகர்கள் கூறினர்.
அஸ்வின் இந்த போட்டியில் நான்கு ஓவர்களில் 43 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. எனவே மூத்த வீரரான அஸ்வின் இந்த போட்டியில் சரியாக செயல்படாதது தான் ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் எனவும், தனது சொந்த ஊரான சென்னையில் ஆடியதால் அவர் பவர் பிளே ஓவர்களில் பந்து வீச தாமாக முன்வந்து கூறியிருப்பார் எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது, அடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2024 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியது.


Click it and Unblock the Notifications