பெங்களூர் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணி தற்போது ஒன்பதாவது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இதன் மூலம் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சிஎஸ்கே அணி தொடரை விட்டு லீக் சுற்றோடு வெளியேறி இருக்கிறது.
ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது ஸ்டார் அந்தஸ்தை பெற்ற ஆர் சி பி அணி மட்டும் தான் இருக்கிறது. இந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆர் சி பி அணிக்கு ஆதரவு அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சிஎஸ்கேவின் கடைசி லீக் ஆட்டத்தில் விராட் கோலி செய்த சேட்டை சிஎஸ்கே ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. மேலும் ஆர்சிபி ரசிகர்கள் அத்துமீறி சிஎஸ்கே ரசிகர்களிடம் நடந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களும் இம்முறை ஆர்சிபிக்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள். ஆர்.சி.பி மீது இருந்த கருணை தற்போது கொஞ்சம் கூட ரசிகர்கள் மத்தியில் இல்லை.
இந்த நிலையில் ஆர்சிபி அணி தற்போது பிளே ஆப் சுற்றில் எலிமினேட்டர் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளுக்குமே தற்போது ஒரு ஒற்றுமை இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் 7 போட்டிகளில் ஆறு போட்டியில் வெற்றி பெற்று வந்த நிலையில் ஆர் சி பி அணி முதல் ஏழு போட்டிகளில் ஒரு போட்டிக்கு மட்டுமே வெற்றி பெற்று கடைசியில் தொடர்ந்து ஆறு ஆட்டங்களில் வென்று பிளே ஆப்பை எட்டிப் பிடித்திருக்கிறது.
இந்த நிலையில் பிளே ஆப் சுற்றில் இந்த இரு அணிகளும் விளையாடுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே ஐபிஎல் 2015 ஆம் ஆண்டு ஆர் சி பி அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இதேபோன்று எலிமினேட்டர் போட்டியில் விளையாடி இருக்கிறார்கள். இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் ஆர் சி பி வீழ்த்திருக்கிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 180 ரன்கள் எடுத்தது. இதில் டிவில்லியர்ஸ், மந்திப் சிங் ஆகியோர் அரை சதம் எடுக்க, பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 109 ரன்களில் சுருண்டது. அதன் பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு குவாலிபையர் 2 போட்டியில் ஆர்சிபி அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பல பரிட்சை நடத்தியது.
இதில் முதல் குவாலிபயரில் குஜராத்துடன் தோல்வியை தழுவி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் எலிமினேட்டரில் லக்னோ அணியை வீழ்த்தி விட்டு குவாலிபையர் 2க்கு வந்த ஆர்சிபி அணியும் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர் சி பி அணி 157 ரன்கள் மட்டுமே எடுக்க, இதன் பின்னர் களம்பிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜாஸ் பட்லர் அபாரமாக சதம் அடித்து ராஜஸ்தான் அணிக்கு ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தேடி தந்தார்.
நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் தொடர்ந்து தோல்வி,ஒரு போட்டி மழையால் ரத்து என்ற நிலையில் இருக்கிறது. ஆனால் ஆர் சி பி அணி தொடர்ந்து ஆறு போட்டிகளில் வெற்றி இருக்கிறது. இதனால் rcb வெற்றி பயணத்தை தொடருமா இல்லை ராஜஸ்தான் ராயல்ஸ் முட்டுக்கட்டை போடுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.