கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 223 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆர்சிபி அணி ஒரு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தற்போது தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. ஆர்சிபி அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்று ஆறு தோல்வியை தழுவியது.
இதனால் தங்களுடைய எட்டாவது லீக் போட்டியில் களமிறங்கிய ஆர்சிபி என்று பலம் வாய்ந்த கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர் சி பி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை அடுத்து கே கே ஆர் அணியின் தொடக்க வீரர் பில் ஷார்ட் 48 ரன்களிலும்,சுனில் நரைன் 10 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 16 ரன்களிலும் ஆட்டமிழக்க கேப்டன் ஸ்ரேயாஸ் 36 பந்துகளில் அரை சதம் கடந்து பெவிலியன் திரும்பினார். எனினும் இறுதியில் ரிங்கு சிங் 16 பந்துகளில் 24 ரன்களும், ஆண்டிரூ ரஸில் 20 பந்துகளில் 27 ரன்களும் ரமன்தீப் சிங் 9 பந்துகளில் 24 ரன்களும் எடுக்க கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆர் சி பி களம் இறங்கியது. விராட் கோலி அதிரடியாக விளையாடி ஏழு பந்துகளில் 18 ரன்கள் சேர்த்தார். எனினும் நடுவரின் தவறான முடிவால் அவர் ஆட்டம் இழந்தார். கேப்டன் டுபிளசிஸ் 7 ரன்களில் வெளியேற, வில் ஜாக்ஸ் மற்றும் ரஜத் பட்டிதார் ஜோடி அதிரடியாக பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்தது.
வில் ஜாக்ஸ் 32 பந்துகளில் 55 ரன்கள் சேர்க்க இந்த தொடர் முழுவதும் தடுமாறிய ரஜத் பட்டிதார் இன்றைய ஆட்டத்தில் 23 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இதில் 5 இமாலய சிக்சர்களும் மூன்று பவுண்டரிகளும் அடங்கும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேமரன் கிரீன் 6 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் மற்றும் கரன் சர்மா ஆகியோர் ஆர் சி பி அணியின் வெற்றிக்காக போராடினர்.
இந்த சூழலில் கடைசி இரண்டு ஓவரில் 31 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அப்போது 19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரி என அடித்த நிலையில் கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆர்.சி.பி இருந்தது. அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் கரன்சர்மா, இந்த ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்குப் போன ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சை சிக்சருக்கு விரட்டினார்.
கடைசி ஓவரில் முதல் பந்து மற்றும் மூன்றாவது மற்றும் நான்காவது பந்து என சிக்சர் அடிக்க ஆர் சி பி அணி வெற்றியின் அருகே சென்றது. இரண்டு பந்துகளில் மூன்று ரன்கள் தேவை என்ற போது கரன்சர்மா ஐந்தாவது பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதன் அடுத்து கடைசி பந்தில் மூன்று ரன்கள் தேவை என இருந்தபோது ஆர் சி பி வீரர் ஃபெகர்சன் இரண்டாவது ரன்னை ஓட முற்பட்ட போது ரன் அவுட் ஆனார். இதன்மூலம் ஆர் சி பி அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. இனி ஆர்சிபி அணி எஞ்சிய ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று மற்ற அணியின் தயவு இருந்தால் மட்டுமே பிளே ஆப்க்கு செல்ல முடியும். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.