பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இம்முறை பெங்களூரிலிருந்து வேறு நகரத்திற்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு நிகராக ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட அணி என்றால் அது ஆர்சிபிக்கு தான்.
இதற்கு காரணம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது ஐபிஎல் பயணத்தை இங்கு தொடங்கி தற்போது வரை அந்த அணிக்காக விளையாடி வருகிறார். இதனால் ஒட்டுமொத்த விராட் கோலி ரசிகர்களும் ஆர் சி பி அணிக்கு தான் ஆதரவு தெரிவிப்பார்கள்.

எப்படி தோனி சென்னையின் தத்துப் பிள்ளையாக மாறினாரோ, அதேபோல் விராட் கோலி பெங்களூரில் தத்துப் பிள்ளையாகவே வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் விராட் கோலி கடந்த சில மாதங்களாக தனிப்பட்ட காரணங்களை மேற்கோள் காட்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் ஐபிஎல் போட்டியில் தான் அவர் திரும்ப விளையாட இருக்கிறார்.
இதன் காரணமாக விராட் கோலி, ஆர் சி பி அணிக்காக விளையாடும் நாளை எதிர்பார்த்து அவருடைய பெங்களூர் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் அவர்களுக்கு ஒரு ஏமாற்றம் காத்திருக்கிறது. பெங்களூரில் வரலாறு காணாத தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.குடிக்கக்கூட தண்ணி இல்லாத காரணத்தால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளும் ஐடி ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் போன்ற முறைகள் கடைபிடிக்கப்படுகிறது.
தண்ணீர் இல்லாத காரணத்தினால் பலர் பெங்களூரை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கிரிக்கெட் போட்டிக்கு ஆடுகளத்தை தயார் செய்வதற்கு பெருமளவு தண்ணீர் தேவைப்படும்.ஏற்கனவே குடிக்கக்கூட தண்ணீர் இல்லாத நிலையில் தற்போது பெங்களூரில் போட்டியில் நடத்துவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இதனால் ஐபிஎல் போட்டிகள் பெங்களூரில் இம்முறை நடத்தப்படாமல் விசாகப்பட்டினம் அல்லது ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு மாற்றப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. எனினும் ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் அதற்குள் இது குறித்து புதிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிரிக்கெட் வட்டார தகவல் தெரிவிக்கின்றன. ஐபிஎல் போட்டிகள் பெங்களூரில் நடைபெறுமா இல்லையா என்பது மார்ச் 19ஆம் தேதி தெரியவரும்.