சென்னை : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்த பின் தோனி ஆர்சிபி அணியின் வீரர்களுக்கு கைகுலுக்காமல் சென்றுவிட்டார் என ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அதன் பின்னணி குறித்து தற்போது தெரிய வந்துள்ளது.
இதுதான் தோனியின் கடைசி போட்டி என பலராலும் சொல்லப்பட்டாலும் அது குறித்து சிஎஸ்கே நிர்வாகமும், தோனியும் எதுவும் சொல்லவில்லை. இந்த நிலையில், இந்தப் போட்டி முடிந்தவுடன் ஆர்சிபி வீரர்கள் தாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விட்டதை கொண்டாடி வந்தனர்.

பொதுவாக போட்டி முடிந்தவுடன் ஒரு நிமிடம் இந்த கொண்டாட்டம் இருக்கும். அதன் பின் எதிரணி வீரர்களுக்கு கை கொடுக்க வருவார்கள். ஆனால் இந்த போட்டியின் முடிவில் சுமார் மூன்று நிமிடங்களுக்கும் மேலாக ஆர்சிபி வீரர்கள் மைதானத்தின் மத்தியில் நின்று வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
சிஎஸ்கே அணியினர் வரிசையாக நின்று கைகுலுக்க காத்திருந்தனர். தோனி முதல் நபராக வரிசையில் நின்று இருந்தார். ஆனால், ஆர்சிபி வீரர்கள் அதை கண்டு கொள்ளவே இல்லை. சில நிமிடங்கள் காத்திருந்த பின் தோனி மைதானத்தை விட்டு வெளியேறி சென்றார். வெளியேறி சென்றபோது கூட அங்கே நின்றிருந்த ஆர்சிபி அணியின் உதவியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு அவர் கைகுலுக்கிய பின்னரே ஓய்வறைக்கு சென்றார்.
அவருக்கு முழங்காலில் வலி இருப்பதால் ஒவ்வொரு போட்டிக்கு பின்னரும் அவர் அதற்கான முதலுதவி சிகிச்சைகளை எடுத்துக் கொள்கிறார். இந்த போட்டியில் கடைசி ஓவரில் தான் தோனி அவுட் ஆகி இருந்தார். அதனால் போட்டி முடிந்த பின் முதல் ஆளாக கைகுலுக்கி முடித்து விட்டு தனக்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம் என அவர் காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வலியைப் பொறுத்துக் கொண்டு வரிசையில் நின்ற போதும் ஆர்சிபி வீரர்கள் யாரும் கைகுலுக்க வரவில்லை. இதை அடுத்து தோனி மைதானத்தை விட்டு ஓய்வறைக்கு சென்றார்.
ஆனால் இது தெரியாமல் ஆர்சிபி ரசிகர்கள் பலரும் தோனி தங்கள் அணியை அவமதித்துவிட்டதாகவும், விராட் கோலி ஓடி சென்று அவருடன் கைகுலுக்கியதாகவும் கூறி வருகிறார்கள். ஆனால் உண்மையில் நடந்தது இதுதான் என தெரிய வந்துள்ளது.