பெங்களூர் : 2024 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதயத் துடிப்பை எகிற வைத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து சேஸிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிரடியாக பேட்டிங் செய்து முதல் ஆறு ஓவர்களிலேயே 92 ரன்கள் சேர்த்தது. துவக்க வீரர் ஃபாஃப் டுபிலேசிஸ் 22 பந்துகளில் 64 ரன்கள் குவித்து மிரள வைத்தார். விராட் கோலியும் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கும் மேல் அதிரடியாக ரன் குவித்து ஆடினார்.

இதை அடுத்து பெங்களூரு அணி எளிதாக வெற்றி பெற்று விடும் என அனைவரும் நினைத்த நிலையில் வரிசையாக விக்கெட்களை இழக்கத் தொடங்கியது. 92 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்து இருந்த பெங்களூரு அணி 117 ரன்களுக்கு ஆறு விக்கெட்களை இழந்து மோசமான நிலைக்கு சென்றது. டுபிலேசிஸ் 64, விராட் கோலி 42, வில் ஜாக்ஸ் 1, ரஜத் படிதார் 2, கிளென் மேக்ஸ்வெல் 4, கேமரான் கிரீன் 1 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஜோஷ் லிட்டில் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்களை அள்ளி இருந்தார். பெங்களூரு அணி 10.4 ஓவர்களில் 117 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இருந்த நிலையில் தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் களத்தில் இருந்தனர். அதிக பந்துகள் மீதமிருந்த போதும் கையில் நான்கு விக்கெட்கள் மட்டுமே இருந்தது. மேலும் வேகமாக விக்கெட்கள் சரிந்ததால் பெங்களூரு அணி தோல்வி அடையுமோ என ரசிகர்கள் பதற்றம் அடைந்தனர். பின்னர் அனுபவ தினேஷ் கார்த்திக் மற்றும் ஸ்வப்னில் சிங் விரைவாக பவுண்டரிகளை அடித்து பெங்களூரு அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 13.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.