RCB vs GT- கடைசி 13 ஓவரில் 153 ரன்கள்.. குஜராத் அணியை காப்பாற்றிய தமிழக வீரர்கள்.. ஆர்சிபி சோகம்
அகமதாபாத் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் அணியில் தமிழக வீரர்கள் அதிக அளவு இடம் பிடித்திருக்கிறார்கள் சிஎஸ்கே அணியில் கூட ஒரு தமிழக வீரர்கள் இல்லை. ஆனால் குஜராத் அணியில் நான்கு வீரர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அகமதாபாத்தில் நடைபெற்ற 45 வது லீக் ஆட்டத்தில் ஆர் சி பி அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய விரித்மான் சாகா 4 பந்துகளில் 5 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

கேப்டனாக களம் இறங்கிய கில் 19 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இந்த நிலையில் முதல் ஏழு ஓவரில் குஜராத் அணி 47 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆர்சிபி வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி குஜராத்துக்கு நெருக்கடி அளித்தனர். இந்த நிலையில் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் ஷாருக்கான் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது.
இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆர் சி பி வீரர்கள் தடுமாறினர். ஏழாவது ஒவரை அபாரமாக பந்து வீசிய ஆர்சிபி, அதன்பிறகு பழைய குருடி கதவை திறடி என்பது போல் பவுலிங் ரன்களை வாரி குவித்தனர். அபாரமாக விளையாடிய தமிழக வீரர் ஷாருக்கான் தன்னுடைய முதல் ஐபிஎல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். 24 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ஷாருக்கான் 50 ரன்கள் கடந்தார். இதில் 5 இமாலய சிக்சர்களும், மூன்று பவுண்டரிகளும் அடங்கும்.
இதேபோன்று சாய் சுதர்சன் 34 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதில் இரண்டு சிக்ஸர்களும், நான்கு பவுண்டரிகளும் அடங்கும். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 86 ரன்களை சேர்த்தது. ஷாருக்கான் 58 ரன்களில் ஆட்டம் இழக்க, சாய் சுதர்சன் கடைசி வரை நின்று ஆர்சிபி பந்துவீச்சை சிதறடித்தார்.
49 பந்துகளை எதிர்கொண்ட சாய் சுதர்சன் 84 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு சிக்ஸர்களும், எட்டு பவுண்டர்களும் அடங்கும். இறுதியில் டேவிட் மில்லர் 19 பந்துகளில் 26 ரன்கள் சேர்க்க குஜராத் அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் கடைசி 13 ஓவரில் குஜராத் அணி ஒரு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 153 ரன்கள் சேர்த்தது.


Click it and Unblock the Notifications